பொது இடங்களில் கட்டட கழிவு கொட்டினால் கடும் நடவடிக்கை
சென்னை: 'சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் இனி கட்டட கழிவு கொட்டினால், ஒரு டன்னுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும்' என, மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநராட்சி கமிஷனர் குமரகுருபரன், 15 மண்டலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொதுசாலைகள், தெருக்கள், நடைபாதைகள், பாதசாரி நடைபாதைகள், மழைநீர் வடிகால்வாய், கால்வாய், ஆறுகள், ஏரிகள், காலி இடங்கள், திறந்தவெளி இடங்களில் கட்டட கழிவு கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு, காற்று மாசு, வெள்ள அபாயம், போக்குவரத்து இடையூறு போன்றவை ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இனி, கட்டட கழிவை பொது இடங்களில் கொட்டினால், அந்த வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், வாகனத்தின் படம் மற்றும் கொட்டப்பட்ட கட்டட கழிவு படங்களை, அதிகாரிகளின் மொபைல் போன் செயலியில் பதிவேற்றுவது அவசியம். கொட்டப்பட்ட கழிவின் அளவில், ஒரு டன்னுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். விதிக்கப்பட்ட முழு அபராத தொகையையும் செலுத்தியப்பின், பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்கலாம். இந்த அபராத நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. மாநகராட்சி அனுமதித்துள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் கழிவு கொட்டினால், எந்த விதிவிலக்கும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.