உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்கள் அசைவ உணவு சாப்பிட எம்.சி.ராஜா விடுதியில் பயோ மெட்ரிக் புது ரூல்ஸ் போட்டதால் அதிருப்தி

மாணவர்கள் அசைவ உணவு சாப்பிட எம்.சி.ராஜா விடுதியில் பயோ மெட்ரிக் புது ரூல்ஸ் போட்டதால் அதிருப்தி

சென்னை, சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில், 'நான் வெஜ்' உணவு சாப்பிட மட்டும் மாணவர்கள் 'பையோ மெட்ரிக்' கருவியில் பதிவு செய்ய வேண்டும் என்பது, கல்லுாரி மாணவர்கள் இடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 1,331 மாணவ - மாணவியர் விடுதி செயல்படுகின்றன. இவற்றில், சென்னையில் 21 விடுதியில் மட்டும், பொது சமையலறை திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டாக உணவு தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக் கு 'பார்சல்' முறையில் வழங்கப்படுகிறது. அதன்படி, விடுதி மாணவர்களுக்கு மாதத்தில் நான்கு நாட்கள் அசைவ உணவு வழங்கப்படுகிறது . சென்னை தவிர, பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து விடுதிகளிலும் 'பயோ மெட்ரிக்' அடிப்படையில் தான், மாணவர்களுக்கு உணவு கட்டணம் வழங்கப்படுகிறது. அதாவது, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, 'பயோ மெட்ரிக்' கருவியில் தினமும் கணக்கிடப்பட்டு, மாத இறுதியில் உணவு கட்டணம் வழங்கப்படும். ஆனால், சென்னையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மாறாக, மாதத்தில் அசைவு உணவு வழங்கப்படும், நான்கு நாட்கள் மட்டும், 'பயோ மெட்ரிக்' அவசியம் என, விடுதி நிர்வாகம் புது 'ரூல்ஸ்' போட்டுள்ளது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விடுதி மாணவர்கள் கூறியதாவது: சைதாப்பேட்டை எம்.சி.ராஜா பழைய மற்றும் புதிய மாணவர் விடுதி கட்டடத்தில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளோம். ஒரு அறைக்கு 15 பேர் நெருக்கடியான இடத்தில் தங்கியுள்ளோம். இது குறித்து, பல முறை அதிகாரிகளிடம் கூறியும், நடவடிக்கை இல்லை. இ ட வசதி தான் இல்லை என்றால், உணவிற்கும் திண்டாட்டம் தான். அசைவ உணவிற்கு மட்டும் 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு செய்ய வேண்டும் என, ஊழியர்கள் புது 'ரூல்ஸ்' போட்டுள்ளனர். அசைவ உணவு இல்லாத மற்ற நாட்களில், விடுதியில் இந்த கட்டுப்பாடு கிடையாது. அன்று உணவு எவ்வாறு இருந்தாலும் அதை யாரும் கேட்பதில்லை. மாறாக, 'நான் வெஜ்' உணவுக்கு மட்டும், பயோ மெட்ரிக் அவசியம் என்பது எங்களை இழிவாக நடத்துவது போல் உள்ளது. விடுதி உணவை நாங்கள் திருடி வெளியிலா விற்கப் போகிறோம். எனவே, இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி வெற்றிகுமாரிடம் கேட்ட போது, அவர் பதிலளிக்கவில்லை.

ஐந்து மாதங்களாகியும்

'பயோ மெட்ரிக்' இல்லை

சைதாப்பேட்டையில் 44.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, எம்.சி.ராஜா புதிய மாணவர்கள் விடுதி கட்டடம் திறந்து, ஐந்து மாதங்களாகியும், அங்கு 'பயோ மெட்ரிக்' பொருத்தப்படவில்லை. பயோ மெட்ரிக் அடிப்படையில் தான், உணவு கட்டணம் வழங்கப்படுகிறது எனில், ஐந்து மாதங்களாக அதிகாரிகள் உணவு கட்டணத்தை எப்படி வழங்கி இருப்பர். மாறாக, இஷ்டத்திற்கு உணவு ஒதுக்குவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக கூட இருக்கலாம் என, மாணவர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை