மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
28-Aug-2024
திருவொற்றியூர், தண்டவாளத்தில், ஆபத்தான முறையில், பள்ளி சீருடையுடன் சுற்றித் திரியும் மாணவ - மாணவியரை, போலீசார் கண்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை, திருவொற்றியூரில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு, 20,000 க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் சிலர், வகுப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, நண்பர்களுடன் கடற்கரையில் சுற்றித் திரிகின்றனர். சில நேரங்களில், கடலில் குளியல் போடும் மாணவர்கள், அலையில் சிக்கி பலியாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.இதை தடுக்கும் பொருட்டு, கடற்கரைகளில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, பள்ளி நேரத்தில் சீருடையில் சுற்றித்திரியும் மாணவ - மாணவியரை கண்டித்து அனுப்புகின்றனர்.இந்நிலையில், திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையம் வரையிலான, தண்டவாளப் பகுதியில் மதியம், 11:00 மணிக்கு மேல், மாலை, 4:00 மணி வரை, அரசு பள்ளியைச் சேர்ந்த சில மாணவ - மாணவியர் ஜோடியாகவும், தனியாகவும் சுற்றித் திரிகின்றனர்.இதுபோன்ற, பாதுகாப்பின்றி சுற்றித்திரியும் மாணவர்களிடம் சமூக விரோதிகள் அத்துமீறவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், பேசிக் கொண்டே செல்பவர்கள், கவனக்குறைவில் ரயில் வருவதை பார்க்காமல், விபத்தில் சிக்கவும் நேரிடலாம்.இது குறித்து, பள்ளி நிர்வாகங்களிடம் கேட்ட போது, பள்ளிக்கு வந்த பின், மாணவர்கள் வெளியேறி செல்வது கிடையாது. அதுபோன்ற சம்பவம் நடக்காது.இது போன்று சுற்றித் திரியும் மாணவர்கள், பள்ளிக்கே வராமல் வெளியே சுற்றுவதாக கூறப்படுகிறது. அவர்களின் வருகை பதிவேட்டினை ஆராய்ந்து, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கிறோம் எனக் கூறினர்.எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் கவனித்து, பள்ளி நேரத்தில் சீருடையில் சுற்றித் திரியும் மாணவ - மாணவியரை பிடித்து, பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பதுடன், கடுமையாக கண்டிக்க வேண்டும்.இல்லாவிடில், சமூக விரோதிகளால் மாணவர்கள் பாதிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
28-Aug-2024