உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெல் கொள்முதல் திடீர் நிறுத்தம் விவசாயிகள் மத்தியில் கலக்கம்

நெல் கொள்முதல் திடீர் நிறுத்தம் விவசாயிகள் மத்தியில் கலக்கம்

சென்னை:முன்னறிவிப்பு இன்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 15 நாட்களாக அரசின் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது, விவசாயிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில், 66,690 ஏக்கர், செங்கல்பட்டு மாவட்டத்தில், 32,851 ஏக்கர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 27,170 ஏக்கரில் இந்தாண்டு, நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சாகுபடி செய்யப்பட்ட நெல், அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. நெல் மூட்டைகளை டிராக்டர், மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். ஆனால், எந்த முன்னறிவிப்பும் இன்றி, 15 நாட்களாக இம்மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், மழையில் நனையும் நெல் மூட்டைகள், முளைப்பு எடுத்தால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. கிடங்கில் இடமில்லாததாலும், அரசிடம் நிதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தாலும் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஆஞ்சநேயலு கூறியதாவது: நாள்தோறும் கொள்முதல் செய்யும் நெல்லை, அரவை மில்லுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், சேமிப்பு கிடங்குகள் இல்லாததால், அவை அங்கேயே வைக்கப்பட்டு உள்ளது. இதனால், கொள்முதல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலம் துவங்கவுள்ளதால், நெல் மூட்டைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மூட்டைக்கு ரூ.50 கமிஷன் அடங்காத அதிகாரிகள் நெல் அறுவடைக்கு முன், கிராம நிர்வாக அதிகாரியிடம் சிட்டா அடங்கல், ஆதார், காண்பித்து சான்று பெற வேண்டும். இதற்காக, கிராம நிர்வாக அதிகாரிக்கு, 1,000 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும். அவர் கொடுக்கும் சான்றிதழுடன் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரியை சந்திக்க வேண்டும். பின், அவரது அறிவுரைப்படி, உள்ளூர் கிராம பெருதனக்காரரை சந்தித்து, 40 கிலோ மூட்டைக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சில இடங்களில், கொள்முதல் நிலைய மேற்பார்வையாளர்களே, அந்த தொகையை வசூலிக்கின்றனர். அதன்பிறகே, கொள்முதல் அனுமதி வழங்குகின்றனர். சாகுபடி முடிந்த கையோடு செலவிற்கு பணம் இல்லாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர். நகைகள், வீட்டு உபயோக பாத்திரங்கள் ஆகியவற்றை அடகு வைத்தும், கந்து வட்டி வாங்கியும், மூட்டைக்கான கமிஷனை விவசாயிகள் செலுத்துகின்றனர். அதன்பிறகே, விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதலுக்கான பணம் வங்கி கணக்கில் விடுவிக்கப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருக்கும் விவசாயிகளை விரக்தி அடைகின்றனர். முளைக்கும் அபாயம் உள்ள நெல் மூட்டைகளை, 1,000 ரூபாய் குறைத்து வியாபாரிகள் வாங்கி கொள்கின்றனர். வியாபாரிகளை, நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளே அனுப்பி வைக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி பலமுறை அறிவுறுத்தியும் அடங்காத அதிகாரிகளால் விவசாயிகள் அவதி தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !