10 நாளாக வெளியேறும் கழிவுநீர் அலட்சிய அதிகாரிகளால் அவதி
வேளச்சேரி, அடையாறு மண்டலம், 177வது வார்டு வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர் 9வது பிரதான சாலை மற்றும் டான்சிநகர் 4வது தெரு ஆகியவை, அடுத்தடுத்த தெருக்களாக உள்ளன.இங்கு, 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில், 10 நாட்களாக இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி நிற்கிறது.இதனால், பகுதிமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது.கழிவுநீர் குழாயில் அடைப்பு அதிகரித்துள்ளது. புகார் அளித்தால், சாதாரண இயந்திரம் வாயிலாக, பெயரளவிற்கு மட்டும் அடைப்பை அகற்றுகின்றனர். ஆனால், அன்று இரவே மீண்டும் கழிவுநீர் வெளியேறி பிரச்னை அதிகரிக்கிறது.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:பெரிய இயந்திரம் வாயிலாக அடைப்பை அகற்றினால் தான், தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இல்லையென்றால், குழாய் சேதமடைந்து கழிவுநீர் வெளியேறலாம். அந்த இடத்தில் முழு ஆய்வு செய்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க புகார் அளித்தோம். புகாரை முடித்து வைக்க வேண்டி, பெயரளவிற்கு மட்டும் அடைப்பை அகற்றுகின்றனர். நிரந்தர தீர்வு எட்டும் வகையில், குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.