திருவள்ளூரில் நான்காவது முனையம் ரயில்வேக்கு தமிழக அரசு பரிந்துரை
சென்னை, திருவள்ளூரில் நான்காவது ரயில் முனையம் அமைக்க பரிசீலிக்க வேண்டுமென, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு, தமிழக போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார். போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில், தற்போது 11 ஜோடி விரைவு ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. சென்ட்ரலில் நெரிசலை குறைக்க, கூடுதல் விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும்.சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து நான்காவது ரயில் முனையம் அமைக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை திருவள்ளூரில் அமைத்தால், ரயில் போக்குவரத்து வசதிக்கு சிறப்பாக இருக்கும். சென்னையில் நெரிசல் குறைவதோடு, வெளியூருக்கு விரைவு ரயில்களில் செல்வோருக்கு வசதியாகவும் இருக்கும். மேலும், திருவள்ளூரில் இருந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக சிங்கபெருமாள் கோவில் வரை புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.