தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருவொற்றியூர்,திருவொற்றியூர், சுங்கச்சாவடியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, மூன்று தினங்களாக கணபதி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின.நேற்று காலை, ஹோமத்தில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்பாடாகின. பின், வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கும், புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று முதல் 48 நாட்களுக்கு, மண்டல பூஜை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.