உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியை கடித்து குதறிய நாய் உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு

சிறுமியை கடித்து குதறிய நாய் உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு

கோயம்பேடு, கோயம்பேடு, நியூ காலனி ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார், 42. இவரது மகள் சஞ்சனா, 10. இவர், கோயம்பேடில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற சிறுமி சஞ்சனா, வீடு திரும்பியபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்னையன் என்பவரது நாட்டு நாய் இனத்தை சேர்ந்த வளர்ப்பு நாய் துரத்தி கடித்து குதறியது. இதில், சிறுமியின் முழங்கை, இடது கால் மற்றும் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், நாயின் உரிமையாளர் பொன்னையன், 49 மீது, அஜாக்கிரதையாக பிராணிகளை வளர்த்தல், காயம் ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.சென்னையில் வீடுகளில் நாய்கள் வளர்ப்பது குறித்து கேட்ட போது, அதில் பெரியளவில் சட்ட சிக்கல்கள் இல்லை என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் கமல் உசேன் கூறியதாவது:இந்தியாவின் தட்பவெப்பம் சூழலை தாக்குப்பிடிக்க முடியாத ஒன்பது வகை குளிர் பிரதேச நாய் இனங்களை, இனப்பெருக்கம் செய்ய தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது. அதன்படி, பாசெட் ஹவுண்ட், பிரஞ்சு புல்டாக், அலாஸ்கன் மலாமுட், கீஷொண்ட், நியூபவுண்ட்லாந்து, நார்வே எல்கவுண்ட், திபெத்திய மாஸ்டிப், சைபீரியன் ஹஸ்கி, செயின்ட் பெர்னார்ட் ஆகிய ஒன்பது வகை நாய்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.சென்னை மாநகராட்சியில் எந்த வகையான நாய் இனங்களை வளர்க்கவும் தடையில்லை. அதேநேரம், நாய்களை வீடுகளில் வளர்ப்போர், அதற்காக மாநகராட்சியிடம் 50 ரூபாய் செலுத்தி பதிவு உரிமம் பெற வேண்டும். மாநகராட்சியிடம் பதிவு பெற்றிருப்பதுடன், நாய்க்கான தடுப்பூசிகளை முறையாக செலுத்திருக்க வேண்டும். நாய்களை வளர்ப்போர் வீட்டிற்கு வெளியே கட்டாயம் சங்கலியுடன் தான் அழைத்து வரவேண்டும் என்பதும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டிய விதிமுறை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி