மேலும் செய்திகள்
கூடுதல் கட்டணம் வசூல் பார்க்கிங்கில் அடாவடி
27-Aug-2025
குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் சாலை துண்டிப்பு கட்டணம் என்ற பெயரில், இரண்டு முறை வசூல் நடத்தி கண்ணாமூச்சு ஆடுகின்றன. அதோடு, ஐ.டி.சி., என்ற அபிவிருத்தி மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவதால், புதிய வீடு கட்டுவோர் பெரும் தொகையை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வீடு மற்றும் வணிகம் சார்ந்த கட்டடம் கட்ட, கட்டடத்தின் பரப்பை பொறுத்து, மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.,வின் அனுமதி பெறவேண்டும். இதற்கு கட்டணம் செலுத்தும்போது, குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புக்கு, சாலை துண்டிப்பு கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், பேருந்து சாலையில் சாலை துண்டிப்பு கட்டணம், சதுர மீட்டருக்கு 5,515 ரூபாயும், உட்புற சாலைகளில் 4,525 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சிறு கட்டடமாக இருந்தால், மாநகராட்சியும், மூன்று மாடிக்கும் மேலான கட்டடங்கள் என்றால், சி.எம்.டி.ஏ.,வும் கட்டணம் வசூலிக்கின்றன. கட்டுமான பணி முடிந்து, குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது, மீண்டும் சாலை துண்டிப்பு கட்டணம் என்ற பெயரில், குடிநீர் வாரியமும் வசூல் நடத்துகிறது. இதனால், ஒரு சேவைக்கு இரண்டு துறைகளில் சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதால், ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது, எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதவிர, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் விதிகளின்படி, 1998ம் ஆண்டுக்கு பின் கட்டிய கட்டடங்களுக்கு, ஐ.டி.சி., என்ற அபிவிருத்தி மேம்பாட்டு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மூன்று மாடி வீடு, மொத்தம் 15,000 சதுர அடிக்கு மேல் கட்டினால், 40,425 ரூபாய் ஐ.டி.சி. கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி, ஒரு கட்டடத்திற்கு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டணம் மற்றும் ஐ.டி.சி., கட்டணம் சேர்த்து, 75,000 ரூபாய் வரை செலுத்த வேண்டி உள்ளது. இது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக்க பகுதிகளிலும் 1998 ம் ஆண்டு முதல் இந்த கட்டணம் வசூலிப்பது பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற காத்திருப்போர் கூறியதாவது: கடந்த 1998ம் ஆண்டு முதல் கட்டிய கட்டடத்திற்கு, ஐ.டி.சி., கட்டணம் செலுத்த கூறுகின்றனர். நாங்கள், 2011ம் ஆண்டுக்குபின், கட்டிய கட்டடத்திற்கு வசூலிக்க கேட்கிறோம். கட்டட அனுமதி பெறும்போது, சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தியபின், மீண்டும் செலுத்த சொல்வது எந்தவிதத்தில் நியாயம். சாலை துண்டிப்பு கட்டணம் நிர்ணயிப்பதிலும் குளறுபடி உள்ளது. சி.எம்.டி.ஏ., - மாநகராட்சி, குடிநீர் வாரியம் இணைந்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கட்டட அனுமதி பெறும்போது வசூலிக்கும் சாலை துண்டிப்பு கட்டணத்தை வைத்து, இணைப்பு பெறும்போது சாலையை சீரமைப்பதில்லை. மாறாக, நாங்கள் இணைப்பு கொடுக்கும்போது, மீண்டும் சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தும்படி மாநகராட்சி கூறுகிறது. அதனால், நுகர்வோரிடம் சாலை வெட்டு கட்டணம் வசூலிக்கிறோம். வரியில் ஊதியம், பராமரிப்பு செலவுகள் செய்கிறோம். ஐ.டி.சி., கட்டணத்தில் தான் திட்ட பணிகளுக்கு வாங்கிய வங்கி கடனை செலுத்த வேண்டி உள்ளது. அதை, நுகர்வோர் செலுத்தி தான் ஆக வேண்டும். தவணை முறையில் செலுத்த, உயர்அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடந்து வருகிறது. - குடிநீர் வாரிய அதிகாரிகள் உயர் அதிகாரிகள்தான் தீர்வு காண வேண்டும் கட்டட அனுமதி வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தும் வகையில், ஆன்லைன் வடிவமைப்பு உள்ளது. அதை நீக்கிவிட்டு குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறும்போது, கட்டணம் செலுத்தும் வகையில் இருந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உயர்அதிகாரிகள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். - மாநகராட்சி அதிகாரிகள் ஐ.டி.சி., கட்டணம் * தரைத்தளம் மற்றும் இரண்டு மாடி வீடு கட்டியிருந்தால், ஒரு சதுர அடிக்கு, 26.95 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இந்த வகையில், 500 சதுர அடி வீதம் மூன்று மாடி கட்டினால், 40,425 ரூபாய் செலுத்த வேண்டும் * தரைபரப்பாக இருந்தால், 12,000 சதுர அடியில், ஆறு சமையல் அறை இருந்தால், ஐ.டி.சி., கட்டணம் செலுத்த வேண்டும் * வணிக கட்டடங்கள், 3,200 சதுர அடிக்கு மேல் இருந்தால், சதுர அடிக்கு 26.95 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இணைப்பு கட்டணம் குடிநீர், கழிவுநீருக்கு தனித்தனி வீட்டின் அளவு சதுர மீட்டர் (ரூ.) 46.47(495 சதுர அடி) வரை 100 100(1,076 சதுர அடி) வரை 5,000 200(2,152 சதுர அடி) வரை 7,500 200க்கு மேல் ஒவ்வொரு 200 சதுர மீட்டருக்கும், கூடுதலாக 7,500 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். 1,000 சதுர அடிக்கு எவ்வளவு? மேற்கண்ட அளவுகளின் அடிப்படையில் 1,000 சதுர அடி உள்ள மூன்று மாடி கட்டடத்திற்கு குடிநீர் இணைப்பிற்கு, 5,000 ரூபாய், பாதாள சாக்கடை இணைப்பிற்கு, 5,000 ரூபாய் என, 10,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் வீட்டில் இருந்து 5 மீட்டர் துாரத்தில் பாதாள சாக்கடை மேல் மூடி இருந்தால், சாலை வெட்டிற்கு 22,000 ரூபாய், வீட்டின் அருகே மழைநீர் வடிகால் இருந்தால், கூடுதலாக 2,000 ரூபாய் சேர்த்து, 24,000 ரூபாய் கட்ட வேண்டும். மேலும், குடிநீர் இணைப்பு சாலை வெட்டிற்காக, 5 மீட்டர் துாரத்திற்கு 19,300 ரூபாய் கட்ட வேண்டும். அத்துடன், ஐ.டி.சி., கட்டணம் என, 40,000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற, மொத்தம் 93,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. - நமது நிருபர் -
27-Aug-2025