உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சோதனைக்கு வந்த அதிகாரிகள் 10 மணி நேரம் காக்க வைத்த தம்பதி

சோதனைக்கு வந்த அதிகாரிகள் 10 மணி நேரம் காக்க வைத்த தம்பதி

புதுவண்ணாரப்பேட்டை,சோதனைக்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகளை, 10 மணி நேரம் தம்பதியின் காக்க வைத்த சம்பவம் வடசென்னையில் நடந்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து, டிரோன் கேமரா இறக்குமதி செய்த விவகாரத்தில், வரி ஏய்ப்பு செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதீஷ்பிரபு என்பவரிடம் பொருட்களை விற்றோம் என, கைதானவர்கள் கூறியுள்ளனர்.இதையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை, பிரின்ஸ் வில்லேஜில் சதீஷ்பிரபு வசித்து வரும் வீட்டில் சோதனை செய்வதற்காக, சுங்கத்துறை கண்காணிப்பாளர் சாரன் தலைமையில், எட்டு அதிகாரிகள் நேற்று காலை, 9:00 மணிக்கு வந்துள்ளனர்.இதையறிந்த சதீஷ்பிரபுவும், அவரது மனைவியும்,கதவை உள்பக்கமாக தாழிட்டு விட்டனர். சோதனைக்கான ஆணை உள்ளதை கூறி, கதவை திறக்கும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால், தம்பதி கதவை திறப்பதாக தெரியவில்லை.மாலை, 6:30 மணி வரை, இந்த பேச்சு நடந்தது. பின், சதீஷ் பிரபுவின் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் சமாதானத்தை தொடர்ந்து, 10 மணி நேர போராட்டத்திற்கு பின், அவர்கள் கதவை திறந்தனர். அதிகாரிகள் இரவிலும் சோதனை நடத்தினர்.சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்பே முழு விபரம் தெரியவரும். பாதுகாப்பிற்காக, அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !