உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரு துறை நிர்வாகத்தினரின் அலட்சியம் அரைகுறை பணியால் பள்ளத்தில் சிக்கிய லாரி

இரு துறை நிர்வாகத்தினரின் அலட்சியம் அரைகுறை பணியால் பள்ளத்தில் சிக்கிய லாரி

மாதவரம்:மாதவரம், அலெக்ஸ் நகர், அண்ணா தெருவில், இரண்டு நாட்களுக்கு முன் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சாலையில் பாய்ந்து தேங்கியது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மாநகராட்சி அதிகாரிகள், 'இந்த பணியை நாங்கள் செய்ய முடியாது. சென்னை குடிநீர் வாரியத்திடம் புகார் செய்யுங்கள்' எனக் கூறினர். குடிநீர் வாரியத்திடம் புகார் செய்தால், 'மாதவரத்தில் நடக்கும் புதிய கட்டுமான பணிக்கான கட்டுமான பொருட்கள் கொண்டு வரும், கனரக வாகனங்களின் அழுத்தம் தாங்காமல், பாதாள சாக்கடை சேதமடைகிறது.'அதனால், அந்த பணியை மாநகராட்சி நிர்வாகம் தான் சீரமைக்க வேண்டும். நீங்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்' என கூறி அலைக்கழித்தனர். இதனால், அதிருப்தி அடைந்த பகுதிவாசிகள், இரு துறை நிர்வாகத்தின் உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.அதன்பின், உயரதிகாரிகளிடம் இருந்து வந்த உத்தரவால், பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணியை, இரு தரப்பினரும் அவசரமாக செய்து முடித்து, அரைகுறையாக பள்ளத்தை மூடிவிட்டு சென்றனர்.இந்நிலையில், நேற்று பகல் 12:00 மணியளவில், அந்த பகுதியில் நடக்கும் தனியாருக்கு சொந்தமான புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிக்காக, சென்னையில் இருந்து, 150 சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த மினி லாரி, அரைகுறையாக மூடப்பட்ட பள்ளத்தில் சிக்கியது.இதையடுத்து, அந்த சாலையில் மற்ற வாகனங்கள் சென்று வர முடியாத நிலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதன்பின், சிமென்ட் மூட்டைகளை இறக்கி, லாரியை பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்தனர். இரு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், மீண்டும் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக, அப்பகுதியினரும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை