முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை
திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீன் பொலினேனி, பணம் கையாடல் குற்றச்சாட்டில், கொளத்துார் போலீஸ் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புகார் அளித்து இரு வாரங்கள் ஆகியும் வழக்குப்பதியாமல், துணை கமிஷனர் நேரடியாக விசாரித்துள்ளார். அவர் விடுமுறையில் சென்றிருப்பது மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது.திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும்முன், மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றால், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதே உண்மை.உள்துறையை கட்டுப்பாட்டில் வைக்க அவரால் இயலவில்லை. அவரின் நிர்வாக தோல்விகளுக்கு வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா? உடனே, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடக்க வேண்டும். இரு வாரங்களாக வழக்கு பதிவு செய்யாமல், நவீன் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய துணை ஆணையர்மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - அண்ணாமலைதமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்
வழக்குப்பதியாதது ஏன்?
சென்னை மாநகர போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பால் நிறுவன கருவூல மேலாளர், 40 கோடி ரூபாய் மோசடி செய்தது குறித்து, நிறுவனத்தின் சட்ட மேலாளர், ஜூன், 24ல், மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை தர, மனுதாரர் அவகாசம் கோரினார். இதுவரை சமர்பிக்காததால், புகார் மனு விசாரணை நிலையிலேயே உள்ளது; வழக்கு பதியவில்லை. புகாருக்குள்ளான நவீன் பொலினேனியை போலீசார் அழைத்து விசாரிக்கவில்லை. முன் ஜாமின்கோரி, முதன்மை நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை ஜூலை, 11க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொளத்துார் துணை கமிஷனரிடம், ஜூன், 25ல், நிறுவனம் தரப்பில் தரப்பட்ட புகார், மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை துவங்கவில்லை. இந்நிலையில், நவீன் பொலினேனி, நேற்று முன்தினம் மாலை, தன் சகோதரி, திருமலா பால் நிறுவன இ - மெயிலுக்கு தகவல் அனுப்பிவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அனுப்பிய இ - மெயிலில், காவல் துறை பற்றி எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.