| ADDED : ஜன 31, 2024 12:28 AM
புதுவண்ணாரப்பேட்டைசென்னை, புதுவண்ணாரப்பேட்டை, தேசியநகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 34. சமையல் கான்ட்ராக்டர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிவகுமார் வீட்டருகே நின்று கொண்டிருந்த மூவர் கஞ்சா புகைத்து போதையில் ரகளை செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட சிவாவிடம், வாக்குவாதம் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்த கும்பல், சிவக்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியது. அது, வீட்டின் வெளியே இருந்த இரும்பு கேட் அருகில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. சிவக்குமார் கொடுத்த புகாரின்படி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார், 19, தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மனோஜ் மற்றும் அவரது நண்பர் பிரவீன்ராஜ், 22 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மனோஜ்குமார் மீது 11 வழக்குகள் உள்ளதும், இவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்பதும், பிரவீன் ராஜ் மீது போக்சோ வழக்கு உள்ளதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.