உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொள்ளையடிக்க திட்டமிட்டும் பயனில்லை ஏ.டி.எம்.,மில் பதுங்கி சிக்கிய திருடன்

கொள்ளையடிக்க திட்டமிட்டும் பயனில்லை ஏ.டி.எம்.,மில் பதுங்கி சிக்கிய திருடன்

செங்குன்றம், சென்னை - கோல்கட்டா நெடுஞ்சாலை, செங்குன்றம் பை - பாஸ் சாலையில் ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. அதன் கீழ் பகுதியில் அதன் ஏ.டி.எம்., மையம் உள்ளது.ஆவடி, வீராபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், 45, என்பவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மேல் வங்கி ஏ.டி.எம்.,மிற்கு சென்றுள்ளார். பணத்தை கொள்ளையடிப்பதற்காக, ஏ.டி.எம்., மையத்தில் இயந்திரத்தின் பின்புறம் குறுகிய இடைவெளியில் ஒளிந்து கொண்டார்.ஊழியர்கள் அனைவரும், பணி முடிந்து சென்றதும், மாலை 5:30 மணிக்கு வங்கி பூட்டப்பட்டது. ஏ.டி.எம்., மையத்திற்கு பலரும் பணம் எடுக்க வந்து சென்றுள்ளனர். ஆனால், யார் கண்ணிலும் சுரேஷ் சிக்கவில்லை.இரவு வரும் வரை, அதே இடத்தில் காத்திருந்த சுரேஷ், பணத்தை கொள்ளையடிப்பதற்காக, நள்ளிரவில் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றார். அப்போது, ஏ.டி.எம்.,மில் இருந்து அலாரம் ஒலித்தது. இது குறித்த தகவல், வங்கி மேலாளர் மொபைல் போன் எண்ணிற்கும் சென்றது.இதையடுத்து வங்கி மேலாளர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து, அப்பகுதி ரோந்து போலீசாரிடம், வங்கி அலாரம் குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனே, ரோந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ஏ.டி.எம்., இயந்திரம் பின்பகுதியில் சுரேஷ் ஒளிந்திருப்பதை கண்டனர். அவரை பிடித்த போலீசார், வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை