| ADDED : ஜன 11, 2024 01:36 AM
திருப்போரூர், திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் அடங்கிய குயில்குப்பம் இருளர் பகுதியில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, செங்குன்றத்தைச் சேர்ந்த சந்துரு, 20, என்பவர், ஓராண்டுக்கு முன் வந்து வாடகைக்கு தங்கியுள்ளார்.அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை, சந்துரு காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் உறவினர் கார்த்திக், 26, சந்துருவை கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த சந்துரு மற்றும் 17 வயதுடைய அவரது நண்பர் இணைந்து, கார்த்திக்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு, கார்த்திக் மற்றும் அவர் நண்பர்கள் மூன்று பேர், இருசக்கர வாகனங்களில் கொட்டமேடு - -மானாமதி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.இதை நோட்டமிட்ட சந்துருவும், அவரின் நண்பரும், ராயமங்கலம் பகுதியில் மறைந்திருந்து கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். இதில், கார்த்திக்கின் இடது கை துண்டானது. படுகாயமடைந்தவரை, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இதற்கிடையில், மானாமதி போலீசார் மற்றும் பொதுமக்கள் சந்துரு மற்றும் 17 வயது நண்பரும் பிடிபட்டார். இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.