உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2 கோடி மதிப்பு சொத்து அபகரித்து விற்ற மூவர் கைது

ரூ.2 கோடி மதிப்பு சொத்து அபகரித்து விற்ற மூவர் கைது

சென்னை, போலியான ஆவணங்கள் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து, 2 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்து விற்பனை செய்த, மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். தி.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 55. அவருக்கு, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதியில், 2,530 சதுர அடி சொத்து உள்ளது. அதை சிலர், போலியான ஆவணங்கள் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து அபகரித்து விற்பனை செய்துள்ளனர். இதை அறிந்த அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில், ஆக., 11ம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கே.கே., நகர் பகுதியைச் சேர்ந்த பிரியா, 32, என்பவர், புகார்தாரின் ஒரே வாரிசு என ஆள் மாறாட்டம் செய்து, 2 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதற்கு, போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்து, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த பாலசுந்தர ஆறுமுகம், 40, வானுவம்பேட்டையைச் சேர்ந்த சாலமன்ராஜ், 38, ஆகிய இருவரும், உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், செப்., 25ம் தேதி பிரியாவை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, பாலசுந்தர ஆறுமுகம், சாலமன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை