உண்டியலை துாக்கிச்சென்ற 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது
கொளத்துார், கோவில் உண்டியலை துாக்கிச்சென்ற இரண்டு சிறார்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கொளத்துார் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் மோகனவேல், 48. இவர், வீட்டின் அருகே மாரியம்மன் கோவிலை நிர்வகித்து வருகிறார். கடந்த 7ம் தேதி கோவில் உண்டியல் காணாமல் போனது. ராஜிவ்காந்தி நகர் முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணம் திருடு போயிருந்தது. ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொளத்துாரைச் சேர்ந்த அசோக்குமார், 19 மற்றும், 15, 17 வயதுடைய இரு சிறார்கள் என, மூவரையும் நேற்று கைது செய்தனர். உண்டியலை துாக்கிச் சென்று உடைத்து, அதிலிருந்த 40,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, உண்டியலை சிவசக்தி நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. மேலும், ராஜிவ்காந்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் உண்டியலில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. கைதான அசோக்குமாரை புழல் சிறையிலும், மற்ற இருவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.