சென்னை, ஓ.எம்.ஆரில் முக்கிய சந்திப்பாக, டைடல் பார்க் உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் உள்ளதால், சாலையை கடக்கும் பாதசாரிகள் எண்ணிக்கை அதிகம்.ஒரு சிக்னல் மாற்றும் நேரத்தில், 200 முதல் 300 பேர் வரை சாலையை கடக்கின்றனர். இதனால், விபத்து, அதிகரிக்கும் சிக்னல் நேரம் என, பல்வேறு பிரச்னை உள்ளது.கூடவே, மெட்ரோ ரயில் பணி, 'யு - டர்ன்' பாலம் என, சாலையின் அகலம் குறைந்ததால், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண, நடைமேம்பாலம் அமைக்க, சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு பணி துவங்கியது.ஓ.எம்.ஆர்., மற்றும் திருவான்மியூர் நோக்கிச் செல்லும் சாலையை கடக்கும் வகையில், 350 அடி நீளம், 10 அடி அகலத்தில், நடைமேம்பாலம் கட்டப்படுகிறது.ஏறும் வகையில், மூன்று இடத்தில் படிகளும், இரண்டு இடத்தில் நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளன. தற்போது, 65 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இரண்டு மாதத்தில், அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு விட, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.