உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் பிரச்னை அரசு தலையிட தொழிற்சங்கம் கோரிக்கை

எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் பிரச்னை அரசு தலையிட தொழிற்சங்கம் கோரிக்கை

சென்னை :'எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் பிரச்னையில், தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்' என, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி: எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் சார்பில், கடந்த 10ம் தேதி துவங்கிய போராட்டம் இன்று வரை தொடர்கிறது. ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பயிற்சியாளர்களை, 1996ல் நிறைவேற்றப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தப்படி நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, எம்.ஆர்.எப்., தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக, தொழிலாளர்களின் குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான முன்பணத்தை, எம்.ஆர்.எப்., நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தை ஏற்றால் மட்டுமே, முன்பணம் வழங்க முடியும் என, நிர்வாகம் அடம் பிடிக்கிறது. நிரந்தர தொழிலாளர்களுக்குப் பதிலாக, பயிற்சி தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்த நிர்வாகம் வலியுறுத்துகிறது. இதை எதிர்த்து, தொழிலாளர்கள் இரண்டு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலாக நிர்வாகம் உணவகம், பேருந்து வசதி ஆகியவற்றை நிறுத்தியதோடு, தொழிலாளர்களை ஆலைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது. கடந்த 15 நாட்களாக சட்ட விரோதமாக கதவடைப்பும் செய்துள்ளது. ஆகையால், தமிழக அரசு தலையிட்டு, 61 பயிற்சியாளர்கள், 900 தொழிலாளர்கள், 2,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ஆலை கதவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையில், தமிழக முதல்வர் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !