உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை வளசரவாக்கத்தில் தொடரும் நெரிசல்

போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை வளசரவாக்கத்தில் தொடரும் நெரிசல்

வளசரவாக்கம் : வளசரவாக்கத்தில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால், ராமாபுரம் உள்ளிட்ட பிரதான சாலைகளில், தொடரும் வாகன நெரிசலை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். வளசரவாக்கம் போக்கு வரத்து காவல் நிலையம் 2012ல் துவக்கப்பட்டது. வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில், வளசரவாக்கம் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். பணிச்சுமை அவர் களுக்கு அதிகமானதால், கூடுதலாக 20 போலீசாரை நியமிக்க கோரிக்கை எழுந்தது. ஆனால், 15 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், 2025ம் ஆண்டு மதுரவாயல் காவல் நிலைய எல்லையை பிரித்து, புதிதாக வானகரம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. இந்நிலையத்திற்கு உட்பட்ட போரூர் சுங்கச்சாவடி மற்றும் சுங்கச்சாவடியை இணைக்கும் வானகரம் பிரதான சாலை, சமயபுரம் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் ஏற்படும் நெரிசல் சீர்செய்யும் பணிகளும், வளசர வாக்கம் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வளசரவாக்கம் போக்கு வரத்து காவல் நிலைய எல்லையில், ஆற்காடு சாலை, ராமாபுரம் பாரதி சாலை, திருவள்ளூர் சாலை என, முக்கிய சாலைகள் உள்ள நிலையில், வானகர பகுதிகளும் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், பணிச்சுமையால் போலீசார் மன உளைச்சல் அடைகின்றனர். வளசரவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில், 18 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதில் இருவர், வெளி பணிக்கு சென்றுள்ளனர். இரண்டு பேர் நிலைய எழுத்தர், இரண்டு பேர் போக்குவரத்து ஆய்வாளர்களின் ஜீப் ஓட்டுநராக உள்ளனர். இதனால், மேற்கண்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்தை சீர்செய்வதில், போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் விளைவாக, ராமாபுரத்தில் தனியார் கல்லுாரி அமைந்துள்ள பாரதி சாலை, அரசமர சந்திப்பு, போரூர் சுங்கச்சாவடி, சமயபுரம் பிரதான சாலை, வானகரம் பிரதான சாலை உள்ளிட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடும் நெரிசல் நிலவி வருகிறது. இதனால், சிறு துாரத்தை கடப்பதற்குள் வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. எனவே, வளசரவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில், போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி