ரயில் இன்ஜினில் மின் கம்பி உடைந்து சேவை பாதிப்பு
எண்ணுார், எண்ணுார் ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை 4:00 மணிக்கு, அத்திப்பட்டில் இருந்து சென்னை நோக்கி, ரயில் இன்ஜின் ஒன்று சென்று கொண்டிருந்தது.திடீரென, ரயில் இன்ஜினின் மின்சாரம் கடத்தும், 'பான்டோகிராப்' கம்பி உடைந்து, உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கியது. இது குறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள், சம்பவ இடத்தில் முகாமிட்டனர். மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, பழுதான ரயில் இன்ஜின் இழுத்து செல்லப்பட்டது.மேலும், உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிய பான்டோகிராப் கம்பி அகற்றப்பட்டது. இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் போக்குவரத்து, ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு பின், நிலைமை சீரடைந்தது. மற்றொரு விபத்து
அரக்கோணத்தில் இருந்து கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில், பராமரிப்பு பணிக்காக, மூன்று வாரங்களுக்கு முன், தாம்பரம் யார்டுக்கு கொண்டு வரப்பட்டது.பராமரிப்பு பணி முடிந்து, நேற்று இரவு 7:00 மணிக்கு, அந்த ரயில், அரக்கோணத்திற்கு செல்வதற்காக, எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் மெயின் லைனுக்கு இயக்கப்பட்டது.அப்போது, 26 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலின் ஐந்து பெட்டிகள், மெயின் லைனுக்குள் வந்த நிலையில், இடையில் இருந்த மூன்று பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.ரயில்வே அதிகாரிகள் விரைந்து, தடம் புரண்ட ரயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 'வீல் அலைன்மென்ட்' சரியாக சர்வீஸ் செய்யப்படாததே, ரயில் தடம் புரண்டதற்கு காரணம் என கூறப்படுகிறது.சரக்கு ரயில் தடம் புரண்டதால், எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.