உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு ஆலை பாதிப்பு குறித்து அறிக்கை கேட்குது தீர்ப்பாயம்

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு ஆலை பாதிப்பு குறித்து அறிக்கை கேட்குது தீர்ப்பாயம்

சென்னை, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையால், வடசென்னைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வடசென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை, மாநகராட்சி உதவியுடன் தனியார் நிறுவனம் அமைக்க உள்ளது. இதனால், தங்கள் பகுதியில் சுற்றுச்சூழல், சுகாதார பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி, வடசென்னை குடியிருப்பாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பெரும்பாலும் தொழிலாளர்கள் வசிக்கும் வட சென்னையை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு அணுகி வருவதாகவும், அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: திட, திரவ மற்றும் பிற கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுவிவரங்களை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இக்குழுவில் நிதித்துறை செயலர் உறுப்பினராக இருப்பதால், இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களும் அறிக்கையில் இடம்பெற வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆக., 6ல் நடக்கும். அதற்கு முன், கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை