ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது
திருவொற்றியூர்: ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம், திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து சென்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் முரண்பாடாக பதிலளிக்கவே, பையை சோதனையிட்டனர். அதில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. பிடிபட்டவர்கள், கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அமிர்தலால், 23, அஸ்வின், 25, என, தெரியவந்தது. ஒடிசாவில் இருந்து, ஒரு கிலோ கஞ்சா 5,000 ரூபாய் வீதம், நான்கு கிலோ கஞ்சாவை, 20,000 ரூபாய்க்கு வாங்கி, ஆந்திராவின், விஜயவாடா வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.