பள்ளியில் மிக்சி, கிரைண்டர் திருடிய இருவருக்கு காப்பு
சென்னை: ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லையில் உள்ள, சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி சமையல் அறையில், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டை, பேகம் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, காலாண்டு விடுமுறைக்கு பின், அக்., 6ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, அப்பள்ளியின் சமையல் அறையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த கிரைண்டர், மிக்ஸி, தராசு, எடை கற்கள், அலுமினிய பாத்திரங்கள் திருடு போனது தெரியவந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹ்பூர் ரஹ்மானி, 57, சென்னை ஐஸ்ஹவுஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பள்ளி அருகே உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 25, வசந்தகுமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். திருடு போன பொருட்களை, இவர்களிடம் இருந்து போலீசார் மீட்டனர்.