பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு பெண் உட்பட இருவர் சீரியஸ்
எண்ணுார், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் நுாரிஷா, 42. இவர், இரு பிள்ளைகளுடன் வசிக்கிறார். நேற்று மாலை, திருவொற்றியூர், தாங்கலைச் சேர்ந்த டில்லிபாபு, 47, என்பவர், அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது, டில்லி பாபு தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி, தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், லைட்டர் மூலம் உடலில் தீ வைத்துக் கொண்ட டில்லி பாபு, திடீரென நுாரிஷாவை கட்டிப்பிடித்துள்ளார். இதில், இருவரது உடலிலும் தீ பற்றி மளமளவென எரிந்தது.இவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும், இருவரது உடலிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. இருவரை காப்பாற்ற முயன்ற நுாரிஷாவின் தாய் ஜெனிமா, 80, என்பவருக்கும், லேசான தீக்காயம் ஏற்பட்டது.தகவலறிந்த எண்ணுார் போலீசார், மூன்று பேரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, இருவரும் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.