பாட்டில் வீசி பஸ் கண்ணாடியை உடைத்த இரு வாலிபர்கள் கைது
கே.கே., நகர் கே.கே., நகர், ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வஅரசன், 47; மாநகர பேருந்து ஓட்டுநர்.இவர், கடந்த 17ம் தேதி ஓட்டிச் சென்ற தடம் எண், '12ஜி' பேருந்தின் பின்பக்க கண்ணாடியை பாட்டில் வீசி இருவர் உடைத்தனர்.கே.கே., நகர் காமராஜர் சாலை, மத்தியாஸ் சர்ச் நிறுத்தத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்தனர்.அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, பேருந்து கண்ணாடியை உடைத்த, வடபழனியைச் சேர்ந்த சஞ்சய், 19, முகமது ஆசிக் அமீர், 20, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கே.கே., நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் மது அருந்தி, போதையில் கடையில் நின்றிருந்ததாகவும், பேருந்து ஓட்டுநர் ஓயாமல் ஹார்ன் அடித்ததால், ஆத்திரத்தில் பாட்டில் வீசி கண்ணாடியை உடைத்ததாகவும், போலீசாரிடம் தெரிவித்தனர்.