உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பியூஸ் கேரியர்கள் திருடிய இரு வாலிபர்கள் கைது 

பியூஸ் கேரியர்கள் திருடிய இரு வாலிபர்கள் கைது 

நீலாங்கரை, மின் பகிர்மான பெட்டியில், மின் இணைப்பு வழங்கும் உபகரணமான 'பியூஸ் கேரியர்'களை திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர். நீலாங்கரை, ஏ.ஜி.எஸ்., காலனி, தாட்கோ காலனி, சுவாமிநாதன் நகர் ஆறாவது தெரு ஆகிய பகுதிகளில், இம்மாதம் 18, 19ம் தேதி அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்தது. மின் வினியோகத்தில் பிரச்னை இல்லாத நிலையில் மின் தடை ஏற்பட்டது குறித்து மின் வாரிய ஊழியர்கள் ஆய்வு நடத்தினர். இதில், சாலையோர மின் பகிர்மான பெட்டிகளில் இருந்து 'பியூஸ் கேரியர்'கள் மாயமானது தெரியவந்தது. ஊழியர்கள் கணக்கெடுப்பின்படி, 75க்கும் மேற்பட்ட 'பியூஸ் கேரியர்'கள் திருடுபோனது தெரிந்தது. இது தொடர்பாக, திருவான்மியூர் மின் வாரிய உதவி பொறியாளர் சரிதா புகாரின்படி நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், பியூஸ் கேரியர்களை திருடிச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட ஜாபர்கான்பேட்டை, பாரி தெருவைச் சேர்ந்த பரணி, 20, வேளச்சேரி நவீன்குமார், 19, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். திருடிய பியூஸ் கேரியர்களில் உள்ள காப்பர் கம்பிகளை எடுத்து, காயலான் கடைகளில் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவுபடி, இருவரையும், போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி