முழுமையாகாத வெள்ள தடுப்பு பணிகள் * அதிகாரிகளை எச்சரித்தார் உதயநிதி
சென்னை, ''வடகிழக்கு பருவமழை வெள்ள தடுப்பு பணிகள் முழுமையடையாமல் உள்ளன. அவற்றை மழை காலத்திற்குள் முடிப்பது மிக, மிக அவசியம்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, உதயநிதி பேசியதாவது: சில ஆண்டுகளாக பருவமழைகாலங்களில் சென்னை அதிகமான மழைபொழிவை எதிர்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட விளைவுகள், பாதிப்புகள் உள்ளிட்டவற்றை அனுபவமாக கொண்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசு அலுவலர்களின் பணிகளால், ஒவ்வொரு முறையும் கனமழை, பெரு வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து, சென்னை மீண்டு வருகிறது. கள அனுபவங்கள், சூழல்களை மையமாக வைத்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்கான திட்டங்களை வகுத்தோம். இப்படி தீட்டப்பட்ட திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்வளத்துறை ஒருபுறமும், சென்னை மாநகராட்சி மறுபுறமும் இந்த பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தடுப்பு பணிகள் இன்னும் முழுமையடையாத சூழல் உள்ளது. அவற்றை மழை காலத்திற்குகள் செய்து முடிப்பது மிக, மிக அவசியம். தற்போது நடந்து வரும் பணிகளின் நிலையை உடனுக்குடன் அலுவலர்கள், 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க முடியும். சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை, முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். நான்கு ஆண்டுகளில் பெரிய அளவில் எந்தபாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட்டு இருக்கிறோம். இந்தாண்டு நாம் இன்னும் அதிக விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும், முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும். மக்களை பாதிக்காத வகையிலும், மற்றவர்கள் குறை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காலும், அரசு அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் பேசினார். இக்கூட்டத்தில், அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். ***