மேலும் செய்திகள்
மனமெங்கும் 'கிருதி'யால் அமைதி
18-Dec-2025
உ ற்சாகத்தையும், நம்பிக்கையையும் தரும் வசந்தா ராகத்தை துவக்கமா க வைத்து, பாலக்காடு ராம்பிரசாத், தன் கச்சேரியை நிகழ்த்தினார். மயிலாப்பூர் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில், முத்துசுவாமி தீட்சிதரின் 'மரகத லிங்கம்' கிருதியை, நயமான குரலால் ஆரம்பித்தார். வழக்கமாக குரலிசை கலைஞர்கள் வர்ணம், கணபதி பாடல் கடந்து முக்கிய உருப்படி செல்வர். ஆனால் இவரோ, இறுதியில் செய்யப்படும் நிரவல் கற்பனை ஸ்வரங்கள், சர்வலகு ஸ்வரங்கள், குறைப்பு ஸ்வரங்கள் மற்றும் ஸ்வர கோர்வைகளை, முதல் பாடலிலேயே கொண்டுவந்து அசரடித்தார். இசை மீதான அவரது பிடிப்பு, இப்பாடலில் இருந்தே அர்த்தமாகிவிடுகிறது. ஸ்ரீ ராகத்தில் ஆலாபனையோடு, நீல தாமரை போல் ஜொலிக்கும் வெங்கடாசலபதியே என, வாசுதேவ பெருமாளை போற்றி பாடினார். இதை, 'வந்தே வாசுதேவம்' என்ற அன்னமாச்சார்யாரின் கண்ட சாபு தாள கிருதியில் வழங்கினார். பின், மனதை உருக்கும் ராகமான சாருகேசியை ஆலாபனையாக இவர் வழங்க, சபையில் இருந்தோர் ரசித்து மகிழ்ந்தனர். தன் பங்கிற்கு திருவனந்தபுரம் சம்பத், வயலின் இசையில் புகுந்து விளையாடினார். 'ஆதித்ய ஹிருதயம்' எனும் சமஸ்கிருத ஸ்தோத்திர வரிகளிலிருந்து, 'ஆதித்ய ஹிருதயம் புன்யம் சர்வசத்ரு வினாஷனம்' என்ற வரிகளை மட்டும் கையாண்ட பிரசாத், அதை மிஸ்ர சாபு தாளத்தில் அமைத்து, அதற்கு நிரவலை வழங்கி, அழகுற சேர்த்தார். இதற்கு, அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. மந்தாரி ராகத்தில், தியாகராஜரின், 'பரலோக பயமு லேக' கிருதியை, நிரவல் மற்றும் கற்பனை ஸ்வரங்களோடு வழங்கினார். கச்சேரியின் முக்கிய உருப்படியாக ஆபோகி ராகத்தில், கோபாலகிருஷ்ண பாரதியின் 'சபாபதிக்கு வேறு தெய்வம்' என்ற ரூபக தாள கிருதியை எடுத்தார். ராக ஆலாபனை மற்றும் தானம் பாடி துவங்கப்பட்ட இக்கிருதிக்கு, ஸ்வரங்கள் மற்றும் ஸ்வர கோர்வையை தந்து சிறப்பித்தார். நெய்வேலி நாராயணரின் மிருதங்கமும், சுரேஷ் வைத்தியநாதரின் கடமும், ச பையை தாளத்தில் திளைக்க வைத்த இசையா கியது. தேஷ் ராகத்தில் 'ரகுபதி ராகவ்' மற்றும் சிந்துபைரவி ராகத்தில் 'வந்தே மாதரம்' ஆகியவற்றை முடித்து, இறுதியில் மங்களம் பாடி, கச்சிதமான முறையில் கச்சேரியை நிறைவு செய்தார். -ரா.பிரியங்கா
18-Dec-2025