மகாலட்சுமி நகர் சிக்னலில் திக்குமுக்காடும் வாகனங்கள்
சேலையூர்:ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரான, தாம்பரம் - வேளச்சேரி சாலை, 24 மணி நேரமும் போக்குவரத்து உடையது. இச்சாலையில், பாரதமாதா, சேலையூர் காவல் நிலையம், கேம்ப் ரோடு, கவுரிவாக்கம், சந்தோஷபுரம் உள்ளிட்ட சந்திப்புகளில், வாகனங்கள் வலதுபுறம் திரும்ப வழிவகை உள்ளது.ஆனால், கேம்ப் ரோடு சந்திப்பை அடுத்த மகாலட்சுமி நகர் சிக்னலில் மட்டும், வாகனங்கள் வலது புறம் திரும்ப தடை செய்யப்பட்டு, இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. சிட்லப்பாக்கம் சாலை வழியாக வரும் வாகனங்கள், வேளச்சேரி சாலை வழியாகவே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.இதனால், சிட்லப்பாக்கம் பிரதான சாலை வழியாக வரும் வாகனங்கள், இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தில் இடது புறம் திரும்பி, ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் சென்று, வலது புறம் திரும்பி, கேம்ப்ரோடு நோக்கி செல்ல வேண்டியுள்ளது.'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், ஏற்கனவே நெரிசல் மிகுந்த ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில், இதனால் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, வேலைக்கு செல்வோர், மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.மற்ற சந்திப்புகளில், வாகனங்கள் வலதுபுறம் 'யு டர்ன்' எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், மகாலட்சுமி நகரில் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து, வாகன ஓட்டிகள் இடையே கேள்வி எழுந்துள்ளது.போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, 'அந்த சந்திப்பில் அதிக நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டே வாகனங்கள் 'யு டர்ன்' எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது' என்றனர்.