மேலும் செய்திகள்
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
24-Jul-2025
சென்னை, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே மாஸ்டர் குற்றவாளி என, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அண்ணாநகர் பகுதியில், 'ஜூடோ' எனும் தற்காப்பு கலை பயிற்சி மையத்தை நடத்தி வந்தவர் கெபிராஜ், 41. இவர், கெருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேர தற்காப்பு கலை பயிற்சியாளராக, சில ஆண்டுகள் பணியாற்றினார். மேலும், சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில தனியார் பள்ளிகளிலும், அவர் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். பயிற்சி பெறும் மாணவியரை போட்டிக்காக, வெளி மாவட்டங்களுக்கு கெபிராஜ் அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவியரை, போட்டிக்காக நாமக்கல் அழைத்து சென்றுள்ளார். போட்டி முடிந்த பின், நாமக்கல்லில் இருந்து ஈரோடு ரயில் நிலையத்துக்கு காரில் வந்த போது, 19 வயது மாணவிக்கு, கெபிராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, அந்த மாணவி கடந்த 2021ல் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மாணவியர் பலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், 2022 மே 19ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று 'கெபிராஜ் குற்றவாளி' என்றும், தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் எனவும், நீதிபதி அறிவித்தார். கெபிராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து, அவரை போலீசார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.
24-Jul-2025