உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வில்லிவாக்கம் ரயில்வே சாலை குப்பை கழிவுகள் கொட்டி நாசம்

வில்லிவாக்கம் ரயில்வே சாலை குப்பை கழிவுகள் கொட்டி நாசம்

வில்லிவாக்கம்:வில்லிவாக்கம் சந்தையின் கடைகளில் வீணாகும் குப்பை கழிவுகளை, ரயில்வே சர்வீஸ் சாலையில் கொட்டிச் செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள, ரயில்வே சர்வீஸ் சாலையின் ஒரு பகுதியில், சந்தை செயல்படுகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலையை பராமரிப்பதில், மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அலட்சியம் காட்டி வருகின்றன. தவிர, சந்தையில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள், சேகமரமாகும் குப்பையை ரயில்வே சர்வீஸ் சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இதனால், காய்கறிகள் உட்பட பல்வேறு கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: சர்வீஸ் சாலையை கடந்து தான், வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இந்த சாலை முழுதும் குப்பை தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி, அவ்வப்போது குப்பையை எடுத்தாலும், மீண்டும் குப்பை தேங்குகிறது. தவிர, ரயில் நிலையம் அருகில் இருபுறங்களில் சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், நடந்து செல்லவே முடியவில்லை. இதற்கு, இரு துறைகளின் அலட்சியமே காரணம். சம்பந்தப்பட்ட துறைகள் கண்காணித்து, வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்; குப்பை கொட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ