உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அன்பு பெருக அறம், ஆன்மிகம் அவசியம்

அன்பு பெருக அறம், ஆன்மிகம் அவசியம்

கடந்த 2016ல் 'அர்ச்சனைப் பூக்கள்' புத்தகம் வாயிலாக தன் எழுத்துப் பணியைத் துவங்கி, 8 ஆண்டுகளில் 40 புத்தகங்களை எழுதி முடித்துள்ள சரஸ்வதி சுவாமிநாதன், சென்னை புத்தக சந்தை அரங்கில் நம்மிடம் பேசியதாவது:

அறம், ஆன்மிகம் சார்ந்தே தொடர்ந்து எழுதி வருவது ஏன்?

இங்கே அறம் சார்ந்து எழுதுவோர் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளனர். நாடு செழிக்க, மக்களிடையே அன்பு பெருக, அறம் வளர வேண்டும். அறம் வளர ஆன்மிகம் வளர்ந்தாக வேண்டும். அதற்காகவே இந்தப் பணி.

எழுத்துப் பணிக்கு வந்தது எப்படி?

தந்தை நுாலகர் என்பதால், வாழ்க்கையின் துவக்க காலங்கள் புத்தகங்கள் சூழவே அமைந்தன. கல்லுாரி நாட்களில் சக ரயில் பயணியாக என் கையிலும், மடியிலும் பயணித்த புத்தகங்கள், பல்வேறு தரங்களைக் கொண்ட இலக்கிய, சமூக சிறு பத்திரிகைகளையும் பல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியது.தொடர்ந்து, எழுத்தாளர் பாலகுமாரனால் ஈர்க்கப்பட்டு, அவரது தொடர் வாசகனாகவே இருந்தேன். அவரோடு பின்னாளில் ஏற்பட்ட நெருக்கம், என்னை எழுத துாண்டியது. அவர் ஆசியுடனே, என் முதல் நுால் 'அர்ச்சனைப் பூக்கள்' 2016ம் ஆண்டு வெளிவந்தது.

வாசகர்களைக் கவரும் எழுத்து நடை எப்படி வசப்பட்டது?

முதல் இரண்டு நுால்கள் குறிப்பிடத்தக்க எழுத்து நடையில் அமையவில்லை என்பதே நிஜம். மூன்றாவது நுாலில் மெருகேறிய எழுத்து, அடுத்தடுத்த படைப்புகளில் வசமாகிவிட்டது.

இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் குறித்து?

என் முதல் 18 நுால்களில் பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றிய படைப்புகளே அதிகம். தவிர காஞ்சி மஹா பெரியவர், ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சாய்பாபா, கோடி சுவாமிகள், ஸ்ரீ ராமானுஜர் ஆகியோருடைய வாழ்வும், வாக்கும் பதிப்பாக வெளிவந்துள்ளன.கடந்த 2017ல் எழுத்தாளர் பாலகுமாரனிடம் ஆன்மிகம், அறம் சார்ந்து நான் கேட்ட 83 கேள்விகளுக்கும், அவர் அளித்த பதில்களைத் தொகுத்து, 'விஷாத யோகம்' என்ற நுாலை எழுதி வெளியிட்டேன்.அந்தப் புத்தகத்தை, எழுத்தாளர் பாலகுமாரனின் 'உயில்' என்று பலரும் கூறிவருகின்றனர். பாலகுமாரன் நாவல் குறித்து பி.எச்டி., செய்கிறவர்கள், என் இந்த நுாலை பயன்படுத்தி வருகின்றனர். இப்படியாக, 40 புத்தகங்களை இதுவரை வெளியிட்டுள்ளேன்.

உங்கள் சமீபத்திய வெளியீடு; தற்போது எழுதிக்கொண்டிருப்பது?

என் 40வது படைப்பான 'ஷோடசி' ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் குறித்த எளிய விளக்கக்களைச் சொல்லக்கூடியது. தற்போது, 'நலக்கேணி' என்ற நுாலை எழுதி வருகிறேன். அதைத் தொடர்ந்து, யாழ்பாணத்து யோகர் சுவாமிகள் குறித்து எழுத உள்ளேன்.

எழுத்துப் பணியில் கனவு?

ஸ்ரீ மத் பாகவதம் குறித்து 'பூர்ணாவதாரம்' என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்பது கனவு. இதற்காக நாடு முழுதும் பயணப்பட திட்டமிட்டிருக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்