வண்ணாரப்பேட்டையில் குடிநீரில் கழிவு நீர் கலப்பு
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டையில், குடிநீரில் கழிவுநீர் கலப்பால் மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், 5,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், அடிகுழாய் மூலமாக, குடிநீர் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இரு மாதங்களுக்கு முன், புதிதாக குடிநீர் குழாய் மாற்றப்பட்டுள்ளது. அன்று முதல், அடி குழாயில் வரும் குடிநீரில், கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் கடும் துர்நாற்றத்துடன் வருகிறது. இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த இரு மாதங்களாக அடி குழாயில், குடிநீரில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் லாரி தண்ணீரை நம்பி இருக்க வேண்டியுள்ளது. சரியான நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதியடைந்து வருகிறோம். வீட்டு பயன்பாட்டிற்கு கேன் தண்ணீர் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையை உடைத்த ரப்பீஸ்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றில், பலரும் இடறி விழுந்து காயமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.