ரேடியல் சாலையில் விபத்து கார் மோதி காவலாளி பலி
கோவிலம்பாக்கம்:-ரேடியல் சாலையில் விபத்தில் சிக்கி காவலாளி உயிரிழந்தார். மேடவாக்கம், வெள்ளக்கல், பெரியார் நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி, 56. இவர், பல்லாவரம் அருகே உள்ள, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். இவர், இரவு பணி முடித்து நேற்று காலை வீட்டிற்கு தன் சைக்கிளில் புறப்பட்டார். ரேடியல் சாலையில், அருள் முருகன் டவர்ஸ் சிக்னலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, 'யமஹா ரே' ஸ்கூட்டரில் பல்லாவரம் நோக்கி சென்ற, கொளத்துாரைச் சேர்ந்த ஜோசப், 29, என்பவர், முனியாண்டி மீது மோதாமல் இருக்க, திடீரென 'பிரேக்' பிடித்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதேநேரம், பின்னால் அதிவேகமாக வந்த 'ஷிப்ட்' கார், சைக்கிள் மீது மோதியது. இதில் முனியாண்டி துாக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜோசப் லேசான காயங்களுடன் தப்பினார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முனியாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கார் ஓட்டுநரான பல்லாவரத்தைச் சேர்ந்த பரத், 24, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.