புழல் உபரி கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரையால் நீரோட்டம் பாதிப்பு
மணலி, புழல் உபரி கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடியால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு, மழைக்காலங்களில் ஊருக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டும்போது வெளியேறும் உபரி நீரானது, புழல், கொசப்பூர், எஸ்.ஆர்.எப்., சந்திப்பு, எம்.எப்.எல்., பர்மா நகர் உயர்மட்ட பாலம், சடையங்குப்பம் மேம்பாலம், எர்ணாவூர் வழியாக எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். அதன்படி, 17 கி.மீ., பயணிக்கும் உபரி கால்வாயில், புழல் - ஆமுல்லைவாயல் வரை, இரண்டு பக்கமும் கரைகள் உள்ளன. ஆமுல்லைவாயல் - சடையங்குப்பம் வரை கரைகள் ஏதுமின்றி இருப்பதால், வெள்ளக்காலங்களில் உபரி நீர் பக்கவாட்டு வழியாக, ஊருக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். இது ஒருபுறமிருக்க, ஆமுல்லைவாயல் உயர்மட்ட பாலம் - எஸ்.ஆர்.எப்., சந்திப்பு வரை, ஒரு கி.மீ., துாரத்திற்கு பாத்தி கட்டி வளர்ந்திருக்கும், ஆகாய தாமரை செடிகளால், நீரோட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2015, 2017, மற்றும் 2019 ம் ஆண்டுகளில், மானாவாரியாக வளர்ந்திருந்த ஆகாய தாமரை செடிகளும், வெள்ளப்பாதிப்பிற்கும் ஒரு காரணமாக இருந்தது. எனவே, பருவமழை துவங்குவதற்கு முன், ஆகாய தாமரை செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.