ஒப்பந்தம் செய்த கடையை காணோம் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி
சென்னை:வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 'கோல்டன் சோக் கிராண்டே' என்ற பெயரில், தனியார் வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில், 607 சதுர அடி கடையை வாங்க, ஜான் டிட்டஸ் சத்யா என்பவர் ஒப்பந்தம் செய்தார்.இங்கு, 65.55 லட்ச ரூபாய் மதிப்பிலான கடையை வாங்க, 32.77 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார். இதற்கான ஒப்பந்தம், 2011ல் மேற்கொள்ளப்பட்டது.பணம் செலுத்தியவர், அந்த கட்டடத்துக்கு நேரில் சென்று பார்த்த போது, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட எண்ணில், அந்த தளத்தில் கடை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. கடை என, கட்டுமான நிறுவனம் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட எண், அங்கு கழிப்பறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.இந்த விவகாரத்தில், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அவர், கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், ஜான் டிட்டஸ் சத்யா, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 2023 டிச., 6ல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், கட்டுமான நிறுவனம் கடையை ஒப்படைக்கவில்லை என்பது தெரிகிறது. இந்த விவகாரத்தில், மனுதாரர் 2014ல் கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதே ஆண்டில், அவர் முறையீடு செய்து இருக்க வேண்டும். ஆனால், 9 ஆண்டுகள் தாமதமாக, 2023ல் தான் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். இதன் காரணமாக, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.