மேலும் செய்திகள்
பணி நிரந்தரம் கோரி தொடரும் உண்ணாவிரதம்
28-Jul-2025
சென்னை, 'முதல்வர் ஸ்டாலின், கொளத்துார் தொகுதிக்கு வாரம் இரண்டு முறை வரும் போதெல்லாம், 15 மணி நேரமாக பணியாற்றினோம். இன்று சாலையில் போராடும் எங்களை சந்திக்க யாரும் வரவில்லை. ஆட்சியாளர்கள், சந்தித்து குறைகளை கேட்டால் தானே எங்கள் வலி புரியும்' என, துாய்மை பணியாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இம்மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டமான என்.யு.எல்.எம்., திட்டத்தின் கீழ், 2,000 துாய்மை பணியாளர்கள் பணியாற்றினர். இவர்களுக்கு மாதம், 23,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால் 13,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், 10,000 ரூபாய் சம்பளம் குறைவதை கண்டித்தும், எதிர்கட்சியாக இருந்தப்போது, பணி நிரந்தரம் எனக்கூறி விட்டு, ஆட்சிக்கு வந்தப்பின், பணியை விட்டு நீக்குவதை கண்டித்தும், மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன், துாய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், போராட்டத்தில் ஈடுபட்டோரை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின், ஜெயகுமார் அளித்த பேட்டி: ஐந்து நாட்களாக, மாநகராட்சி அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை திமிர் பிடித்த ஸ்டாலின் அரசு கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து, 50,000க்கும் குறைவான பணியிடங்களை மட்டுமே ஸ்டாலின் அரசு நிரப்பி உள்ளது. தென் மாவட்டங்கள் வளர்ந்து விட்டதாக கூறும் ஸ்டாலின், எத்தனை இளைஞர்களுக்கு வேலை தரப்பட்டுள்ளது என்பது அறிக்கையாக அளிக்க தயாரா. இவ்வாறு அவர் கூறினார். இறந்தப்பின் சந்திப்பரா? மேயர் பிரியா, 150 பேர் தான் போராடுகின்றனர். அவர்களாகவே சென்று விடுவார்கள் என்கிறார். அவர், எங்களை வந்து பார்த்து குறைகளை கேட்டால் தானே, வலியும், வேதனையும் அவருக்கு புரியும். குழந்தைகளுடன் போராடுகிறோம். எங்களை, என்ன செய்தாலும், இங்கேயே தான் போராடுவோம். ஓட்டுக்காக, பணி நிரந்தரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆட்சிக்கு வந்தப்பின், கருணாநிதிக்கு சிலை, நினைவிடம் உள்ளிட்டவற்றிற்கும், ஆட்சியின் விளம்பரத்திற்கும், தங்கள் ஆடம்பரத்திற்கும் கோடிக்கணக்கான ரூபாயை செலவிடுகின்றனர். நாங்கள் சாலையில் போராடுகிறோம்; உயிர் போகும் வரை போராடுவோம். இந்த ஆட்சியாளர்கள் நாங்கள் இறந்து விட்டால், சடலத்தை பார்க்கவாவது வருவரா என தெரியவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்க, அவர்கள் விரும்பாமல் பிடிவாதமாக உள்ளனர். - வி.மனோன்மணி, துாய்மை பணியாளர், சென்னை மாநகராட்சி சம்பளத்தை திருடாதீர் துாய்மை பணியை நம்பி தான் உள்ளோம். 'இந்த வேலை இல்லை. வெளியே போங்க' என்றால் என்ன செய்வது. முதல்வர் தொகுதியில் தான் பணியாற்றினோம். அவர், தொகுதிக்கு வரும்போதெல்லாம், காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை என, 15 மணி நேரத்திற்கு மேலாக பணியாற்றினோம். அவர் வந்தால், சாலையை சுத்தப்படுத்துவது முதல் அனைத்து பணியையும் செய்தோம். முதல்வர், வாரத்தில் இரண்டு நாட்கள் வருவார். அப்போதெல்லாம் எங்களுக்கு பணிச்சுமை அதிகம். ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தப்பின் ஒரு பேச்சு என்ற அளவில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். நீங்கள் உங்கள் வசதிக்காக பணம் கொள்ளை அடிக்கிறீர்கள். அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் வேலையை எங்களுக்கு கொடுங்கள். எங்கள் சம்பளத்தை திருடாதீர்கள். கஷ்டப்படும் எங்கள் வயிற்றில் அடிப்பவர்கள், என்ன கதிக்கு ஆளாவார்கள், விரைவில் தெரியும். - எம்.வசந்தி, துாய்மை பணியாளர், சென்னை மாநகராட்சி எட்டி பார்த்தால் வலி தெரியுமா? எங்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டாலும், என்.யு.எல்.எம்., திட்டத்தில் பணியாற்றவே விரும்புகிறோம். தனியாரிடம் கடுமையாக பணியாற்றினாலும், எங்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படும். இந்த குறைந்த சம்பளத்தில், அரிசி கூட வாங்க முடியாது. தற்போதைய விலைவாசி ஆட்சியாளர்களுக்கு தெரியாதா? நாங்கள் இவ்வளவு நாட்களாக போராடுகிறோம். ஒரு அதிகாரி கூட வந்து பார்க்கவில்லை. மக்கள் தான் ஆதரவு அளிக்கின்றனர். எங்கள் குறையை, ஒரு அதிகாரியும் வந்து கேட்கவில்லை. உள்ளே இருந்து எட்டி பார்த்தால் எங்கள் வலி உங்களுக்கு எப்படி தெரியும். - நாகராஜ், துாய்மை பணியாளர், சென்னை மாநகராட்சி
28-Jul-2025