உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

பல பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

சென்னை, சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 51. இவருக்கு, பி.இ., பட்டதாரியான 23 வயது மகள் உள்ளார்.இவருக்கு, 'மேட்ரிமோனி'யில் மாப்பிள்ளை தேடி வந்தார். இந்நிலையில், மேட்ரிமோனி புரோக்கர் எபினேசர் மூலம், கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளையைச் சேர்ந்த பி.இ., பட்டதாரியான லிஜின், 27, என்பவர், கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமானார். அடுத்தடுத்த கட்ட பேச்சுகளை அடுத்து, லிஜினுக்கு மகளை திருமணம் செய்து வைக்க, தனலட்சுமி சம்மதித்தார்.திருமணத்திற்காக, லிஜின் தந்தை லிசான் கிறிஸ்டோபர், தாய் விமலாராணி ஆகியோர், பெண் வீட்டாரிடம் 1 லட்சம் ரூபாய் வரதட்சணையும், மணமகளுக்கு, 25 சவரன் தங்க நகையும் தர அறிவுறுத்தினர்.இதற்கு பெண் வீட்டார் சம்மதித்து, கடந்த செப்., 15ம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. கடந்த டிச., 2ம் தேதி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர்ச்சில், இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது.இந்த நிலையில், திருமணத்தன்று, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, 24, என்பவர் அங்கு வந்தார். அவர் பெண் வீட்டாரிடம், 'தன்னுடன் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த லிஜின், தன்னை காதலித்து பாரிமுனையில் உள்ள சர்ச்சில் திருமணம் செய்தார். பின், சேலையூரில் தனிக்குடித்தனம் நடத்தினோம். தற்போது என்னை ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய உள்ளார். திருமணத்தை உடனே நிறுத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.இது குறித்து மணமகளின் பெற்றோர் லிஜினிடம் கேட்டபோது, 'பிரியதர்ஷினியிடம் நட்பாக பழகியதாகவும், பணம் பறிப்பதற்காக திட்டமிட்டு திருமணத்தை நிறுத்த சதி செய்வதாகவும் தெரிவித்தார். பெண்ணுடன் வந்த வழக்கறிஞர்கள் எடுத்து கூறியும் பெண் வீட்டார் நம்பவில்லை.லிஜினிடம், பிரியதர்ஷினி கலாட்டா செய்த நிலையில், காலில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, உரிய ஆதாரங்கள் இல்லாததால் பிரியதர்ஷினியை அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து திருமணம் நடந்தது.இது குறித்த செய்திகள், சமூக ஊடகங்களில் வெளியானது. இதை பார்த்து, தமிழகம் முழுதும் இருந்து லிஜினால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள், பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தனர். அதேநேரம், பெண் வீட்டார் மற்றும் போலீசார், லிஜினின் மொபைல் போனில் ஆய்வு செய்தபோது 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக, பல பெண்களுடன் உரையாடியதும், பலரை திருமணம் செய்து காவல் நிலையங்களில் பஞ்சாயத்து மூலம் பணம் செட்டில் செய்து முடிக்கப்பட்டது தெரியவந்தது.இது குறித்து, பெண் வீட்டார் மாப்பிள்ளையின் பெற்றோரிடம் கேட்க முயன்றபோது, அவர்கள் மொபைல் போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்து, தலைமறைவானது தெரியவந்தது.இதையடுத்து, தன் மகளை நம்ப வைத்து ஏமாற்றி திருமணம் செய்த லிஜின் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் தனலட்சுமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.விசாரணையில் தெரிய வந்ததாவது:கடந்த 2019ல் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெனி என்ற பெண்ணுடன் பழகிய லிஜின், அவரை ஆறு மாத கர்ப்பமாக்கி ஏமாற்ற முயன்றதும், இது குறித்து காரைக்கால் காவல் நிலையத்தில் ஜெனி புகார் அளித்த நிலையில், 5 லட்ச ரூபாய் கொடுத்து, சமாதானம் செய்து தப்பியதும் தெரிந்தது.இதேபோல், கடந்த 2022ல் தென்காசியை சேர்ந்த திவ்யா என்பவரை காதலிப்பதாக ஏமாற்றியதும்; 2023ல், கடலுாரை சேர்ந்த பிரியதர்ஷினியை காதலித்து திருமணம் செய்து, ஓராண்டு சேர்ந்து வாழ்ந்து விட்டு ஏமாற்றியது தெரியவந்தது.மேலும், பல இளம்பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பாக, லிஜின் மீது வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, லிஜினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை