எங்க அண்ணன் இருக்க எனக்கு என்ன பயம்? வேளச்சேரியில் திடீர் போஸ்டரால் பரபரப்பு தொகுதிக்கு துண்டு போட்டு வைக்கும் பா.ஜ.,
சென்னை: 'வேளச்சேரியில் எங்க அண்ணன் இருக்க எனக்கு என்ன பயம்' என, வாசகங்களுடன், வேளச்சேரி தொகுதி முழுதும், 'டால்பின்' மீன் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த எம்.பி., தேர்தலில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட, வேளச்சேரி சட்டசபை தொகுதியில், தி.மு.க., - 76,245 ஓட்டுகள், பா.ஜ., - 51,353 ஓட்டுகள் மற்றும் அ.தி.மு.க., - 23,209 ஓட்டுகள் பெற்றன. தேர்தலில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., இரண்டாம் இடம் பிடித்தது. இதனால், வரும் சட்டசபை தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் போட்டியிட, பா.ஜ.,வினர் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் எதிரொலியாக, சில தினங்களுக்கு முன் தொகுதி முழுதும், 'வேளச்சேரியில எங்கள் அண்ணன் இருக்க எனக்கு என்ன பயம்?' என்ற வாசகத்துடன் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஏதோ வர்த்தக நிறுவன விளம்பரம் என்று நினைத்து போலீசாரும் அமைதி காத்தனர். இருப்பினும், போஸ்டரில் அச்சகம் குறித்த எந்த விபரமும் இல்லாததால், போஸ்டர் ஒட்டிய வாலிபரை பிடித்து, தரமணி போலீசார் விசாரித்தனர். அடுத்த சில நிமிடத்தில், பா.ஜ., மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், காவல் நிலையத்தில் ஆஜராகி, வாலிபருக்காக பரிந்து பேசினார். தீவிர விசாரணையில், வேளச்சேரி தொகுதியை குறிவைத்துள்ள டால்பின் ஸ்ரீதர் ஏற்பாட்டில், பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டது தெரிய வந்தது. அதற்கு அடையாளமாக போஸ்டரில், 'டால்பின் ஸ்ரீதர்' என்பதற்கு பதிலாக, 'டால்பின்' மீன் படம் இடம் பெற்றிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக, போஸ்டர் ஒட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிந்த போலீசார், 'இனிமேல் இதுபோன்று போஸ்டர்கள் ஒட்டக்கூடாது' என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். வேளச்சேரி தொகுதியை, பா.ஜ., மாநில நிர்வாகிகளான தமிழிசை, சூர்யா, கராத்தே தியாகராஜன், தென்சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் சாய்சத்யன் உள்ளிட்டோரும் குறி வைத்துள்ளனர். அதேபோல், தி.மு.க., - அ.தி.மு.க.,விலும் பலர் முயற்சித்து வருகின்றனர். இந்த போஸ்டர் வாயிலாக, 'கூட்டணியில் எங்களுக்கு தான் வேளச்சேரியை ஒதுக்க வேண்டும்' என, பா.ஜ., இப்போதே துண்டு போட துவங்கியுள்ளது.