உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இதுவரை 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை எப்போது தீர்வு? மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கிடுக்கிப்பிடி

இதுவரை 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை எப்போது தீர்வு? மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கிடுக்கிப்பிடி

சென்னை,: சென்னை மாநகராட்சியில், தெருநாய் மட்டுமின்றி வளர்ப்பு நாய்களும் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதில், மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 'சென்னையில் உள்ள, 1.80 லட்சம் நாய்களில், 27 சதவீதம் மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நாய்களுக்கு கருத்தடை செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்; நாய்கள் தொல்லை எப்போது தான் தீரும்' என, கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். சென்னை மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் நடந்த விவாதம்: * பாத்திமா அஹமத், இ.யூ.மு.லீ., 61வது வார்டு: சென்னையில், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இதில், 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நாய்களுக்கு எப்போது கருத்தடை செய்யப்படும். முழுமையாக கருத்தடை செய்து, கட்டுப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும். அதுவரை, தெரு நாய்கள் இனப்பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும். இவற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். * மேயர் பிரியா: சென்னையில் தினமும், 3,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. வளர்ப்பு நாய்களுக்கும் கருத்தடை செய்ய, அறிவுரை வழங்கப்பட்டு, அவற்றுக்கு தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. மண்டலத்திற்கு ஒரு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அவை, இந்தாண்டு டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும். அதன்பின், இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகள் அதிகரிக்கும். துணை மேயர் மகேஷ்குமார்: வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், நாய் வளர்ப்போர் அவற்றை முறையாக கடைப்பிடித்து, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களை அச்சுறுத்தும், 'ராட்விலர்' போன்ற நாய்கள் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும். மாநகராட்சி இணை கமிஷனர் ஜெயசீலன்: ராட்விலர், பிட்புல் நாய்களை தடை செய்வது குறித்து, உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோபிநாத், வி.சி., 65வது வார்டு: ஜாதி பெயரில் அமைக்கப்படும் வணிக வளாகங்களுக்கு, தொழில் அனுமதி அளிக்க கூடாது. சென்னையில் வசிக்கும் திருநங்கையரை தொழில் முனைவோராக மாற்ற, அவர்களுக்கு பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். கண்ணகி நகரில், மின் கசிவால் உயிரிழந்த துாய்மை பணியாளர் குடும்பத்திற்கு, கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு, தொடர்ந்து 23,000 ரூபாய் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேயர் பிரியா: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த துாய்மை பணியாளர் குடும்பத்திற்கு, 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது. பிச்சை எடுப்போருக்கு டி.என்.ஏ., சோதனை துணை மேயர் மகேஷ்குமார் பேசியதாவது: பஞ்சாப் மாநிலத்தில், போக்குவரத்து சிக்னல்களில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க, டி.என்.ஏ., என்ற மரபணு பரிசோதனைக்கு பிச்சை எடுப்போர் உட்படுத்தப்படுகின்றனர். குழந்தை வேறு ஒருவருடையது என்று கண்டறியப்பட்டால், குழந்தையை மீட்டு, காப்பகத்தில் பராமரிக்கின்றனர். அதேபோல், சென்னையிலும் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் டி.என்.ஏ.,வை பரிசோதிக்க வேண்டும். அப்போது தான், குழந்தைகளின் பெற்றோர் அவர்கள் தானா என்பதை கண்டறிய முடியும். மீட்கப்படும் குழந்தைகளை, மாநகராட்சியின் குழந்தை மீட்பு மையங்களில் பராமரித்து, தரமான கல்வியை வழங்க முடியும். இதை, மாநகராட்சியில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ''இது நல்ல திட்டம். இதை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என்றார். மெரினாவில் ரூ.10 கோடியில் பாரம்பரிய வழித்தட மேம்பாடு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வாயிலாக, மெரினா பாரம்பரிய வழித்தடம் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தொழிலாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை, 10 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற உள்ளன. அதுகுறித்து, மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள்: * இச்சாலையில், 2.40 கி.மீ., நீளத்திற்கு, 4 மீட்டர் அகலத்தில், சைக்கிள் பாதை உருவாக்கப்படும் * காமராஜர் சாலையின் இருபுறமும், 9 பேருந்து நிறுத்துமிடங்கள்; 3 புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும் * பாரம்பரிய கட்டடங்களை கண்டுகளிக்கும் வகையில், 9 இடங்களில் காட்சி தளங்கள் அமைக்கப்படும் * சைக்கிள் பாதையில் தெரு விளக்குகள், பொல்லார்ட் விளக்குகள் அமைக்கப்படும். வெளிநடப்பு பணி நிரந்தரம், பழைய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, துாய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு, 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதை கண்டித்து, மா. கம்யூ., - இ.கம்யூ., கட்சி கவுன்சிலர்கள், நேற்று வெளிநடப்பு செய்தனர். ரூ.75 கோடியில் கவுன்சிலர் அரங்கம் கூட்டத்தில், 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானவை: * விருகம்பாக்கம் நீர்வழி கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய், 92.77 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை மேற்பார்வையிட, 1.38 கோடி ரூபாய் ஒதுக்கி, திட்ட மேலாண்மை கலந்தாலோசகர் நியமிக்க அனுமதிக்கப்படுகிறது * தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில், 803 உட்புற சாலைகள், 80 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் * தண்டையார்பேட்டை கேப்டன் காட்டன் கால்வாய் துார்வாரும் பணி, 7.12 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது * ரிப்பன் மாளிகை வளாகத்தில், புதிதாக மாநகராட்சி கவுன்சில் கூட்ட அரங்கம், 74.70 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது * ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் உள்ள 15 பள்ளிகளில், 1.75 கோடி ரூபாயில், தானியங்கி இயந்திரம் வாயிலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்த அனுமதி * அண்ணா நகர் மண்டலம், வி.எஸ்.புரம் பகுதியில் உள்ள இரவு காப்பக கட்டடம், திருநங்கையர் தங்குவதற்காக, மாதம் 30,946 ரூபாய் மாத வாடகை அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஆக 27, 2025 16:13

பலே... அதிலும் இட ஒதுக்கீடு.


Mani . V
ஆக 27, 2025 05:25

27 சதவிகித நாய்களுக்கு கருத்தடை செய்த செலவே 15 கோடி ரூபாய் என்றால், மொத்த நாய்களுக்கும் கருத்தடை செய்ய பல லட்சம் கோடி செலவு கணக்கு காட்டி ஆட்டையைப் போட வேண்டியிருக்குமே?


சமீபத்திய செய்தி