குளத்தில் இறங்கியவர் எங்கே? அண்ணனுாரில் திடீர் சலசலப்பு
ஆவடி, அண்ணனுார் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் இறங்கியவர் திடீரென மாயமான சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தியது. ஆவடி அடுத்த அண்ணனுார் பகுதியில் கங்கையம்மன் கோவில் குளம் உள்ளது. நேற்று மாலை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், நீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். இந்நிலையில், வெகு நேரமாக அந்த வாலிபரை காணவில்லை என, பொதுமக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அயப்பாக்கம் போலீசார், ஆவடி தீயணைப்பு துறையினர் உதவியுடன், வாலிபரை தேடி வருகின்றனர். இந்த குளத்தில் இறங்கி மறுமுனையில் ஏறி வரலாம் என்பதால், வாலிபர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது மறுமுனையில் ஏறி சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். அதேநேரம், அவருடன் மது அருந்திய நபரிடம் விசாரித்தபோது, மாயமான நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.