கவுன்சிலர் நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கோராமல் தாமதம் செய்வது ஏன்? கோடம்பாக்கம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
கோடம்பாக்கம்:கவுன்சிலர் நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கோராமல் தாமதம் செய்வதாக, கோடம்பாக்கம் மண்டலக்குழு கூட்டத்தில், கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். பணிகள் மேற்கொள்ளவும் காலதாமதம் ஏற்படுவதாக மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். கோடம்பாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி கமிஷனர் முருகேசன், செயற்பொறியாளர்கள் இனியன், ரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: ரவிசங்கர், தி.மு.க., 129வது வார்டு: புதிதாக போடப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் உள்ளன. அதில் மழைநீர் தேங்கி விடுகிறது. பணிகளை முறையாக செய்யாத ஒப்பந்ததாரர்களுக்கு 'பில்' தொகை வழங்குவது தவறு. கவுன்சிலர் நிதி ஒதுக்கியும், அதற்கான பணிகள் துவங்கப்படாமல் உள்ளன. மழைநீர் வடிகால்வாய் துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், வார்டு அலுவலகத்திலே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. கண்ணன், தி.மு.க., 138வது வார்டு: எம்.ஜி.ஆர்., நகர், கே.கே., சாலையில் பாதி துாரத்திற்கு தார் சாலை போடப்பட்டது. 12 நாட்களுக்கு மேலாகியும் எஞ்சிய பகுதியில் சாலை அமைக்கவில்லை. அச்சாலையை விரைந்து சீர்செய்ய வேண்டும். உடற்பயிற்சி அமைக்க கவுன்சிலர் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்பணிக்கு இன்னும் ஒப்பந்தம் கோரப்படவில்லை. ஏழுமலை, தி.மு.க., 133வது வார்டு: பூங்காவை பராமரிக்க, ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு 18,000 ரூபாய் எனக்கூறிவிட்டு 8,000 ரூபாயை மட்டுமே, ஒப்பந்ததாரர்கள் ஊதியமாக வழங்குகின்றனர். உழைப்பவர்களுக்கு முழு சம்பளம் கிடைக்க வேண்டும். தி.நகரில் உள்ள பொது கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். உமா ஆனந்தன், பா.ஜ., 134வது வார்டு: மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் வியூ சாலை, பி.ஆர்.பி., தெரு உள்ளிட்ட இடங்களில், கைவிடப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நெரிசல் ஏற்படுகிறது. போஸ்டல் காலனியில் குடியிருப்பு பகுதியில் பைக் மெக்கானிக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகே சாலையின் இருபுறமும் பைக்குள் நிறுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. உதவி கமிஷனர், முருகேசன்: மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட கைவிடப்பட்ட வானங்களை, ஷெனாய் நகரில் உள்ள மைதானத்தில் வைத்துள்ளோம். அவை இன்னும் ஏலம் விடப்படவில்லை. இதற்கு மேல் அப்புறப்படுத்தும் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை. கைவிடப்பட்ட நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் விரைவில் அகற்றப்படும். ஸ்ரீதர், தி.மு.க., 140வது வார்டு: மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள 'அம்மா' பூங்காவில் சி.எம்.டி.ஏ., சார்பில் மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டன. பல மாதங்கள் கடந்தும் 10 சதவீத பணிகள் கூட முடி யவில்லை. அத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து பணிகளை விரைப்படுத்த வேண்டும். பாஸ்கர், தி.மு.க., 130வது வார்டு: கவுன்சிலர் நிதியில் அழகிரி நகர் மூன்றாவது தெருவில் மழைநீர் வடிகால்வாய் பணி துவங்கப்படவில்லை. கவுன்சிலர் நிதியில் ஒதுக்கப்படும் பணிகள் துவங்க தாமதம் செய்வது ஏன்? வடபழனி கருமாரியம்மன் தெருவில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. ஸ்டெல்லா ரத்னம், தி.மு.க., 128வது வார்டு: மாநகராட்சி பள்ளியில் பணி செய்யும் துாய்மை பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. வார்டில் உள்ள பாதாள சாக்கடை மேல் மூடிகள் உள்வாங்கி பள்ளங்களாக உள்ளன. இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. கவுன்சிலர் நிதியில் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்படாமல் உள்ளது. யாழினி, வி.சி., 135வது வார்டு : குடிநீர் வாரியம் சார்பில், அசோக் நகர் 9வது அவென்யூவில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. புதுார் 11வது தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டறிய 10 இடங்களில் பள்ளங்கள் தோ ண்டப்பட்டுள்ளன. இவற்றால் விபத்துகள் ஏற்படும் முன் தடுப்புகள் அமைக்க வேண்டும். கவுன்சிலர் நிதியில் வழங்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் ஒப்பந்தம் கோரப்படாமல் உள்ளது. தாமதம் இன்றி ஒப்பந்தம் கோரி பணிகளை துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். சாலை சீரமைப்பு, குடிநீர் வசதி ஏற்படுத்து வது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.