எழும்பூர் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அமைக்கப்படுமா?
சென்னை:எழும்பூர் ரயில் நிலையத்தில் படிகள் இடிக்கப்பட்ட இடத்தில், 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 35க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், இங்கு போதிய அளவில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக, நடைமேடை போதிய அளவில் மின்துாக்கி மற்றும் எஸ்கலேட்டர்கள் வசதி இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.இது குறித்து ரயில் பயணியும், 'தினமலர்' வாசகருமான பிச்சுமணி, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பிய கடிதம்: எழும்பூர் உட்பட பல ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது வரவேற்கக்கூடியது. ஆனால், பயணியர் வசதிக்கு எது தேவையோ, அதை முதலில் அறிந்து நிறைவேற்ற வேண்டும். எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் செல்லும் நடைமேடை 10, 11ல், நடுவில் மேல்புறம் இருந்த பயணியர் படிக்கட்டு மேடையை, பல ஆண்டுகளுக்கு முன் இடித்து விட்டனர். அதற்கு மாற்றாக, எஸ்கலேட்டர் அல்லது மின்துாக்கி அமைக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அங்கு எந்த வசதியும் அமைக்காததால், பயணியர் சிரமப்படுகின்றனர். படிக்கட்டு இருந்த பகுதியில் எஸ்கலேட்டர் அல்லது மின்துாக்கி வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.