சென்னை, புறநகரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு சுகாதாரத் துறை தனிக்கவனம் செலுத்துமா?
சென்னை மற்றும் புறநகரில், சமீபமாக காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, இந்த விஷயத்தில் சுகாதரத்துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.காலநிலை தட்பவெப்ப மாறுபாட்டால் காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், சமீபத்தில் ஏற்பட்டு வரும் காய்ச்சல் பாதிப்பு, மருத்துவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒரு சில நாட்கள் மட்டுமே காய்ச்சல் இருக்கிறது. ஆனால், அதனுடன் கூட கடுமையான உடல் வலி, வறட்டு இருமல், நெஞ்சு சளி ஆகியவை ஏற்படுகின்றன.இந்த வகை காய்ச்சலால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, கண் வீக்கம், கண் வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. தொடர் வறட்டு இருமல்
மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்தாவது:'சென்னையில் 'இன்ப்ளூயன்ஸா A H3N2' எனும் வைரஸால் ஏற்படும் ப்ளூ காய்ச்சல் பாதிப்பும் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. இது வீரியமானது.இந்த வகை வைரஸ் தாக்கினால், குறைந்தபட்சம் நான்கு நாட்களுக்கு அதிதீவிர காய்ச்சலும், தொடர் இருமலும் சளியும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், காய்ச்சல் விட்ட பிறகும் அதன் அறிகுறிகளான இருமல், சளி, உடல்வலி ஆகியவை, இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும்.சமீப நாட்களாக, பல தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பால் வருவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நுரையீரல் பாதிப்புடன் சிலர் காணப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதியோருக்கு எச்சரிக்கை
மேலும், காற்றின் வாயிலாக வைரஸ் பரவுவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். வெளியில் செல்வோர் முக கவசம் அணிவதை வழக்கமாக கொள்வது நலம். மேலும், எந்த காய்ச்சல் ஏற்பட்டாலும் சுயமாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை சாப்பிடக் கூடாது.இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.சமீபத்தில் பெய்த மழை மற்றும் சென்னையில் சில இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு ஏற்பட்டு உள்ளதே, பாதிப்புக்கு காரணம் என, மன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து உள்ளனர்.காய்ச்சல் காரணமாக மருத்துவமனை சென்றால் ரத்த பரிசோதனை, மருத்துவர் கட்டணம், மருந்து, மாத்திரை செலவு என ஒரு நபருக்கு, 1,200 ரூபாய் வரை செலவாகிறது. இதனால், நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் பொருளாதார ரீதியாக தவித்து வருகின்றனர்.எனவே, சுகாதார துறையின் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, சென்னையில் ஆங்காங்கே மருத்துவ முகாம்களை நடத்தி காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-- நமது நிருபர்- -