| ADDED : மார் 11, 2024 01:38 AM
அஸ்தினாபுரம்,:குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகரில் இருந்து நன்மங்கலம் ஏரிக்கரையை ஒட்டி சாலை செல்கிறது.இதன் வழியாக, நன்மங்கலம் மற்றும் குரோம்பேட்டைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.இச்சாலையை ஒட்டி குப்பை, இறைச்சி மற்றும் ரசாயன கழிவுகள் கொட்டுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், திருமலை நகர், செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து கழிவுகளை, மூட்டை மூட்டையாக கட்டி வந்து, சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால், திருமலை நகர் சந்திப்பு முதல் நன்மங்கலம் வரை குப்பையாகவே காணப்படுகிறது.ஏற்கனவே கழிவுநீர் கலப்பால், இந்த ஏரி நாசமடைந்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் குப்பை, இறைச்சி கழிவுகளால் இன்னும் நாசமடைந்து, எதற்கும் பயனில்லாமல் போய்விடும் என, அப்பகுதியினர் அச்சம் தெரிவித்தனர்.எனவே, அலட்சியமாக இருக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு, கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றி, தொடர்ந்து கொட்டாமல் தடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.