தேர்தல் வருவதால் அம்மா உணவகம் மீது ஆளுங்கட்சிக்கு.. திடீர் அக்கறை அவலத்தை கூறி ஓட்டு அரசியலாக்க அ.தி.மு.க., முயற்சி
'அம்மா' உணவகங்கள் மீது அக்கறை காட்டாதிருந்த ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், சட்டசபை தேர்தல் நெருங்குவதால், மக்களிடம் நல்ல பெயர் வாங்க, சீரமைப்பு பணிகளை விரைந்து முடியுங்கள் என, அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். அதேநேரம், 'அம்மா' உணவகங்களை மூடும் அளவுக்கு கொண்டு சென்ற தி.மு.க.,வின் செயலை அம்பலப்படுத்தி ஓட்டு அரசியல் செய்ய, அ.தி.மு.க.,வும் தயாராகி வருகிறது. ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் தரமான உணவு வழங்க, கடந்த 2013ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் அம்மா உணவகங்களை துவங்கினார். சென்னை மாநகராட்சியில், அரசு பொது மருத்துவமனை உட்பட, வார்டுக்கு ஒன்று வீதம், 207 உணவகங்கள் திறக்கப்பட்டன. பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால், 2016ல், வார்டுக்கு இரண்டு வீதம், 407 உணவகங்கள் திறக்கப்பட்டன. நீதிமன்ற வழக்கு, மெட்ரோ ரயில் பணி, நீர்நிலை உள்ளிட்ட காரணங்களால் 24 உணவகங்கள் மூடப்பட்டு, தற்போது, 383 உணவகங்கள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் அம்மா உணவகங்களுக்கு, சென்னை மாநகராட்சி, 883.51 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. தமிழக அரசு, 143.92 கோடி ரூபாய் அளித்துள்ளது. ஆண்டுக்கு, 73.62 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 'நஷ்டத்தில் இயங்கும் இந்த உணவகங்கள், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மூடிவிடுவார்கள்' என, அ.தி.மு.க.,வினர் கடந்த சட்டசபை தேர்தலின்போது பிரசாரம் செய்தனர். அதேபோல், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அம்மா உணவங்களின் பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்தது. பின், ஆளுங்கட்சியை சார்ந்தவர்களையே சமையலர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என, கவுன்சிலர்கள் நெருக்கடி கொடுத்தனர். நிர்வாக குளறுபடிகளால், பல இடங்களில் அம்மா உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஏழைகளின் உணவளிக்கும் மையங்கள் மூடும் நிலைக்கு சென்றதால், ஆளுங்கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் விழிப்படைந்த தி.மு.க., அரசு, அம்மா உணவகங்கள் மீதான பார்வையை மாற்றிக்கொண்டு, தடையின்றி தொடர்ந்து செயல்பட வழி வகுத்தது. 'அம்மா உணவங்களின் பெயரைக்கூட மாற்றவில்லை' என, தி.மு.க., அரசு பெருமை அடித்துக் கொண்டது. இந்நிலையில், பல இடங்களிலும் அம்மா உணவகங்களின் கட்டடம் பழுதடைந்து, பராமரிப்பின்றி உள்ளதாக அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அம்மா உணவகங்கள் பராமரிப்புக்காக, 21 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கியது. இதற்கான டெண்டரை, மண்டல அளவில் அல்லாமல், வட்டார அளவில் கோரியது. தெற்கு வட்டாரத்தில் 108; வடக்கு வட்டாரத்தில் 126, மத்திய வட்டாரத்தில் 149 என்ற எண்ணிக்கையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த, மூன்று ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. ஒரு சில இடங்களில் பணிகள் நடந்தன; மற்றபடி பல இடங்களில் இன்னும் துவக்கப்படவில்லை என, கூறப்படுகிறது. இதனால் பருவமழையின்போது, அம்மா உணவகங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. இதை ஓட்டு அரசியலாக மாற்ற அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு வருகின்றனர். 'அதுபோன்ற சூழல் ஏற்பட்டு விடக்கூடாது; சட்டசபை தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும்' என, ஆளுங்கட்சி தரப்பினர் அலறுகின்றனர். இதனால், திடீரென அக்கறை காட்டி, அம்மா உணவகங்களில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான அம்மா உணவகங்கள், நீர்நிலை, சாலையோரம்தான் கட்டப்பட்டுள்ளன. முழுமையான கட்டமைப்புடன் கட்டாததால், மேற்கூரை, சுவர் வழியாக மழைநீர் கசிவது, சுவர், தரை விரிசல், துருப்பிடித்த இரும்பு, வண்ணம் பூசாததால் ஒருவித துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் உணவகங்களில் உள்ளன. இவற்றை சரி செய்ய நிதி ஒதுக்கப்பட்டது. மண்டலம் வாரியாக ஒப்பந்தம் விட்டிருந்தால், மூன்று மாதங்களுக்கு முன்பே பணி முடிந்திருக்கும். மழைக்கு பிரச்னை வந்திருக்காது. பல உணவகங்களை பருவமழைக்கு முன் சரி செய்ய வாய்ப்பில்லை. இதனால், மழைநீர் கசிந்து பிரச்னை ஏற்படும். இதை ஓட்டு அரசியலாக மாற்ற அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளதால், தி.மு.க., கவுன்சிலர்கள் பணியை விரைந்து முடித்து கொடுங்கள் என, நெருக்கடி தருகின்றனர். ஒப்பந்த நிறுவனங்களிடம் கூறினால், 'மேலிடத்தில் பேசிவிட்டோம். நீங்கள் அமைதியாக இருந்தால் போதும்' என, எங்கள் வாயை அடைத்து விடுகின்றனர். இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கும் தெரியவில்லை. மழைக்கு முன் முடிந்தளவு அம்மா உணவகங்கள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 'என் வார்டில், கோட்டூர்புரத்தில் உள்ள அம்மா உணவகம் மிகவும் மோசமாக உள்ளது. சென்னையில் 10, 15 உணவகங்கள் தான் நன்றாக இருக்கும். மீதமுள்ள உணவகங்கள் முறையாக இல்லை. தினமும் அங்கு சாப்பிடும் மக்கள், உணவகத்தின் அவலம் குறித்து கேள்வி கேட்பதால், ஓட்டு மாறிவிடுமோ என தி.மு.க., கவுன்சிலர்கள் பதறுகின்றனர். அம்மா உணவகங்களை அரசு மேம்படுத்தாதது குறித்து, மக்களிடம் எடுத்து சொல்லி பிரசாரம் செய்வோம். - கதிர்முருகன், 170வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக மாறிய ஒப்பந்ததாரர்கள் அம்மா உணவகம் நிலை குறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: அம்மா உணவகம் சீரமைப்புக்கு, மண்டலம் வாரியாக ஒப்பந்தம்விட, கமிஷனர், அமைச்சரிடமும் கூறினோம்; கேட்கவில்லை. இப்போது, ஒப்பந்ததாரர்கள் வேலை செய்யாமல், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலிடத்து விவகாரம் என, மண்டல அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. சிலர் எடுக்கும் தவறான முடிவால், தி.மு.க., பக்கமுள்ள ஓட்டுகள் கூட, எதிர் கட்சிகள் பக்கம் சாய்ந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் தானே தினமும் மக்களை சந்திக்கிறோம்; மேலிடத்தில் இருப்போருக்கு கள நிலவரம் தெரிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -