நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை தாக்கி நகை பறிப்பு
குன்றத்துார்:குன்றத்துாரில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர், பெண்கள் இருவரை தாக்கி, கைகளை கட்டிப் போட்டு, 7 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்துார் மணிகண்டன் நகர், காந்தி சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65. பொழிச்சலுாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிதா, 60, தாய் வள்ளியம்மாள், 88, ஆகியோருடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, பணியின் காரணமாக திருமண மண்டபத்திலேயே ராஜேந்திரன் தங்கினார். அபிதா, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர். இரவு 12:00 மணிக்கு, வீட்டின் பின்வாசல் வழியாக நுழைந்த மர்ம நபர், கழிப்பறைக்கு சென்ற அபிதாவின் முகத்தில் தாக்கினார். இதில், அபிதா மயங்கி விழுந்ததும், அவரது கைகளை துணியால் கட்டியுள்ளார். அதன்பின், வீட்டின் அறையில் இருந்த வள்ளியம்மாளை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 சவரன் செயின், 4 சவரன் வளையல்களை பறித்து தப்பினார். வள்ளியம்மாள் கூச்சலிட்டதையடுத்து, அருகில் வசிப்போர் வந்து அபிதாவை மீட்டனர். பின், இதுகுறித்து குன்றத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில நபர் என்பது தெரிய வந்து உள்ளது.