கோவை :வரும் காலங்களில் மஞ்சளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், விரைவில் இருப்பில் வைத்துள்ள மஞ்சளை விற்பனை செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.ராமநாதபுரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திக்கு தொண்டாமுத்தூர், ஆலந்துறை, இருட்டுபள்ளம், தென்னமாநல்லூர், காரமடை, அன்னூர், அவிநாசி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, செஞ்சேரிப்புத்தூர், பி.என்.,பாளையம், துடியலூர், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்து வருகிறது. கட்டுப்படியான விலை இல்லாததால், அனைத்து விவசாயிகளும் குடோன் மற்றும் தோட்டங்களில் இருப்பு வைத்து வருகின்றனர். ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ள ஐந்து குடோன்களிலும் 10 ஆயிரத்திக்கு மேற்பட்ட குவிண்டால் மஞ்சள் தேங்கி கிடக்கின்றன.விற்பனை கூடத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலம் நடத்தப்படுகிறது. கடந்த வருடத்தில் குவிண்டால் 15 ஆயிரம் முதல் 16 ஆயிரத்திக்கு விலைபோனது. தேவை அதிகமாக இருந்ததால் விற்பனையும் சூடாக இருந்தது. இதனால் வியாபாரிகள், விவசாயிகளுக்கு மிகுந்த லாபம் அடைந்தனர். தற்போது தேவை குறைந்து, வரத்து மட்டுமே அதிகமாகியுள்ளது.இந்நிலையில் கடந்த வாரத்தில் குவிண்டால் 6,500 ரூபாய்; நடப்பு வாரத்தில் 4,500 முதல் 4,800 ரூபாய் என விலை குறைந்து கொண்டே வருகிறது. மார்க்கெட்டில் விலை குறையும்போது, ஏலம் எடுப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இரண்டு நாட்கள் நடக்கும் ஏலத்தில் 300 முதல் 500 குவிண்டால்களே விற்பனையாகின்றன. இதனால் போட்ட காசைக்கூட எடுக்கமுடியாமல், விவசாயிகள் விழிபிதுங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரி கூறியதாவது:அதிக பரப்பளவில் மஞ்சள் பயிரட்டதே, விலை குறைவதற்கு முக்கிய காரணம். வரும் மூன்று வருடங்களுக்கு மஞ்சள் விலை அதிகரிக்க வாய்ப்பு மிகவும் குறைவு. மேலும் டிச., மற்றும் ஜன.,யில் அயல் மாநிலத்தில் இருந்து புது மஞ்சள் வரத்து இருக்கும். அதற்குள் குடோன் மற்றும் தோட்டங்களில் இருப்பில் வைத்துள்ள மஞ்சள்களை, வரும் விலைக்கு விற்பனை செய்வது நல்லது. புது மஞ்சள் வந்தபின் பழைய மஞ்சளை வியாபாரிகள் வாங்க தயங்குவர். அதிகநாட்கள் இருப்பு வைக்கும்போது, மஞ்சளின் எடையும் குறையும். அதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும்.