உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நண்பர்கள் தாக்கிய வாலிபர் மரணம்: உறவினர்கள் ஆவேசம்

நண்பர்கள் தாக்கிய வாலிபர் மரணம்: உறவினர்கள் ஆவேசம்

கோவை : குடிபோதையில் நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் இறந்தார். அவரது உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து, மறியலில் ஈடுபட முயன்றனர். கோவை, சாயிபாபாகாலனி,கே.கே.புதூர் -பெரியார் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(29); பெயின் டர். மூன்றாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஏழு மாதத்தில் குழந்தை உள்ளது. கடந்த 10ம் தேதி, சந்தோஷ்குமாரும், நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து மது குடிக்க, சாயிபாபாகாலனி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்றனர். போதையில் ஏற்பட்ட தகராறில், நண்பர் கிருஷ்ணனை சந்தோஷ்குமார் தாக்கினார்.நண்பர்களின் சமாதானத்தையடுத்து, சந்தோஷ்குமார் மதுக்கடையில் இருந்து வெளியேறினார். போலீஸ் ஸ்டேஷன் சிக்னல் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த நண்பர்கள் டூ வீலரை மோதவிட்டனர். இதில் நிலை குலைந்து கீழே சரிந்த சந்தோஷ்குமார் சுயநினைவு இழந்தார்.இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்ட போதை நண்பர்கள் நால்வரும், சரமாரியாக தாக்கியதோடு, அருகில் கிடந்த கல்லால் தாக்கினார். இதில், தலை, முகம், மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இக்கொடூரச் செயலை 100க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்தனர். போலீஸ் ஸ்டேஷன் மிக அருகில் இருந்தும் போலீசார் எட்டிப் பார்க்கவில்லை. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த டிராபிக் போலீஸ்காரர், காயத்துடன் சுய நினைவிழந்து கிடந்த சந்தோஷ்குமாரை, ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலைவெறி தாக்குதலை கண்காணிப்பு காமிராமூலம் பார்த்த போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, வாலிபரை தாக்கிய நான்கு பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் நண்பர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தோஷ்குமார் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு இறந்தார். தகவலறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். ஏழுமாத குழந்தையுடன் மருத்துவமனை வளாகத்துக்கு வந்த அவரது மனைவி சரோஜா கதறி அழுதார். உறவினர்கள் ஆறுதல் கூறியபோது,''நடு ரோட்டில் அடித்தபோது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் யாராவது ஒருவர் தடுத்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார். பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தை அருகில்இருந்த போலீசாராவது தடுத்திருக்கலாம்,'' எனக் கூறி அழுதார். கூட்டத்தில் இருந்த சிலர்,'பட்டப்பகலில், நடுரோட்டில் நடந்த இக் கொடூர சம்பவம் கோவையில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதை காட்டுகிறது' என்று கோஷமிட்டார். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட ஆண்,பெண்கள் கோஷமிட்டபடி, சாலை மறியலில் ஈடுபட திருச்சி ரோடுக்கு வர முயன்றனர். முன் கூட்டியே போலீசார், மருத்துவமனை கேட் அருகே பாதுகாப்புக்கு நின்றிருந்ததால், மறியலுக்கு வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். போலீஸ் அதிகாரிகளின் சமாதானத்தைத் தொடர்ந்து, ஆர்.டி.ஓ.,விசாரணை நடந்தது. இதன்பின், பகல் 2.30 மணிக்கு உறவினர்கள் சந்தோஷ்குமாரின் பிரேதத்தை பெற்று, ஆத்துப்பாலம் சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. கோவையில் நடந்த இச்சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் அலுவலகம் முற்றுகை சந்தோஷ் குமாரின் பிணத்தை வாங்க மறுத்த அவர்கள், அங்கிருந்து கோவை கலெக்டர் அலுவலகத்துக்குக் கூட்டமாக நடந்து சென்றனர். சந்தோஷ் குமார் மனைவி சரோஜா(24), தனது 6 மாத கைக்குழந்தையுடன் அங்கு வந்தார். அவரது உறவினர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளும் அங்கு திரண்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டனர். கலெக்டரைச் சந்திக்காமல் அங்கிருந்து போக மாட்டோம் என்று கூறினர். தகவலறிந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு கலெக்டர் இல்லாததால், கலெக்டரின் நேர்முக உதவியாளரைச் சந்திக்குமாறு போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர். இதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.சந்தோஷ் குமாரின் மனைவிக்கு அரசு வேலையும், நஷ்டஈடும் கொடுப்பதாக அறிவிக்கும் வரை அங்கிருந்து போக மாட்டோம் என்று, போலீசாருடன் வாதிட்டனர். நீண்ட நேரமாகியும் கலெக்டர் வராத காரணத்தால், கலெக்டரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். சரோஜா பெயரில் தரப்பட்ட அந்த மனுவில், 'எனது கணவர், சந்தோஷ் குமார், அவரது பெற்றோருக்கு ஒரே வாரிசு. 'எனக்கு படிப்பறிவு இல்லை. எனக்கு ஆறு மாத கைக்குழந்தை உள் ளது. இவர்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்கு எனக்கு ஏதாவது அரசு வேலை தர வேண்டும். எனது குடும்பத்துக்கு நிவா ரணமாக, ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை